யோத்தி

ச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அயோத்தி நகரில் மசூதி கட்ட 5 ஏக்கர்  நிலம் ஒதுக்கப்பட்டு சன்னி வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அயோத்தி நகரில் பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும் அங்கு மீண்டும் ராமர் கோவில் அமைக்க வேண்டும் எனவும் பல்லாண்டுகளாகக் கோரிக்கை எழுந்து வந்தது.    இதையொட்டி நீதிமன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் வழக்கு தொடர்ந்தனர்.  இந்நிலையில் கடந்த 1992 ஆம் வருடம் கரசேவகர்களால் மசூதி இடிக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது.

அதன் பிறகு அந்த இடத்துக்கு இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடினார்கள்.   இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி அதற்குப் பதிலாக வேறொரு இடத்தில் மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலத்தை வழங்கக் கோரி அரசுக்கு உத்தரவிட்டது.    இந்த தீர்ப்பின்படி அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட நாளை பூமி பூஜை நடைபெறுகிறது.  இதில் பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.  அந்த ஆவணங்களை சன்னி வக்ஃப் வாரியத் தலைவர் ஜுபர் ஃபருக்கி தலைமையில் ஆன குழுவிடம் அயோத்தி மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஒப்படைத்துள்ளார்.  இந்த நிலம் ராமர் கோவில் உள்ள இடத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் உள தன்னிபூர் என்னும் இடத்தில் உள்ளது.