டில்லி

டந்த ஓராண்டில் டில்லி மகளிர் ஆணையத்துக்கு 5.3 லட்சம் அழைப்புக்கள் வந்துள்ளன.

சுவாதி மாலிவால்

டில்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், டில்லி மகளிர் ஆணையத்துக்கு வந்த புகார்கள் மற்றும் வழக்குகள் பற்றி புள்ளிவிவரம் வெளியிட்டு உள்ளார். டில்லி மகளிர் ஆணையத்தில் பிரச்சினைகளில் சிக்கும் பெண்கள் புகார் அளிக்க 181 என்கிற எண் கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்த எண்ணை 40 லட்சம் பேர் அழைத்துள்ளனர்.

சென்ற ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூலை வரை 6 லட்சத்து 30 ஆயிரம் பேர் அழைத்துள்ளனர். அழைப்புகளின் அடிப்படையில் 92 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 38,342 வழக்குகள் குடும்ப வன்முறை வழக்குகள் ஆகும். 5,895 வழக்குகள் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பானவை. 3,447 வழக்குகள் போக்சோ சட்டத்துடன் தொடர்புடையவை. 4,229 வழக்குகள் கடத்தல் வழக்குகள்.

பதிவான 92 ஆயிரம் வழக்குகளில் 38,140 வழக்குகள் 21 முதல் 31 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் பதியப்பட்டவை. 16,939 வழக்குகள் 11 வயது முதல் 20 வயது வரையிலான பெண்களுக்கானவை. 3,735 வழக்குகள் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்காகவும், 40 வழக்குகள் 90 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்காகவும் பதியப்பட்டவை.

மத்திய உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு இந்த புள்ளி விவரங்களைக் கொண்டு செல்ல டில்லி ஆளுநர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.