சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில், கொலை, கொள்ளை சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. நேற்று, பெண் காவலரிடமே கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய அதிர்ச்சி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், சென்னையில்  உள்ள ரவுடிகளின் பட்டியலை, மாநகர காவல்துறை தயார் செய்து உள்ளதாகவும்,  அதன்படி, 4,648 ரவுடிகளின்  பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ரவுடிகளுக்கு விரைவில் மாவு கட்டுப்போடப் படும் என்றும், விரைவில் நடவடிக்கை பாயும் என்றும் காவல்துறை தகவல்கள் தெரிவிகின்றன.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், பொறுப்பேற்றது முதல், சென்னையின் பாதுகாப்பு நடவடிக்கையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி உள்பட பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இதன் அடுத்த நடவடிக்கையாக,  சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் உள்ள ரவுடிகள் குறித்து தகவல்களை சேகரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, கொலை குற்றவாளிகள், கொள்ளைக்கூட்டத் தலைவன், வழிப்பறிக்கொள்ளை, பிக்பாக்கெட் போன்று தரம் பிரித்து,  அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் ரவுடிகளை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ள காவல்துறை ஆணையர், சில ரவுடிகளுக்கு மாவு கட்டுப் போடவும், சிலரை என்கவுண்டர் செய்யவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.