டில்லி:

மெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயன்ற இந்தியர்கள் மெக்சிகோ எல்லையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அவர்களை தாய்நாட்டிற்கே திருப்பும் அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்தியா வைச்சேர்ந்த 311 பேர் நேற்று டில்லி வந்தடைந்தனர்.

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதைத் தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மெக்சிகோ எல்லையில் பிரமாண்டமான சுவரை எழுப்பி வருகிறது.

மேலும் அண்டை நாடான மெக்சிகோவுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெக்சிகோ வழியாக அமெரிக்கா வுக்குள் புகுவதை தடுக்க வேண்டும் என்று நிர்பந்தித்துள்ள அமெரிக்கா, மெக்சிகோ அரசு இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்தாவிட்டால் அந்நாட்டிலிருந்து  இறக்குமதியாகும் பொருட்களின் வரியை பலமடங்கு உயர்த்தி, பொருளாதாரத்தை சிதைத்து விடுவோம் என்றும் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள் மெக்சிகோ தடுத்து வருகிறது.  மேலும் மெக்சிகோவுக்குள் குடியேறி பின்னர் அமெரிக்காவுக்கு செல்லமுயற்சிப்பவர்களையும் கண்காணித்து வருகிறது. அதன்படி, மெக்சிகோவில், சட்டவிரோதமாக குடியேறியதாக கூறப்படும் ஒரு பெண் உள்ளிட்ட 311 இந்தியர்களை மெக்சிகோ திருப்பி அனுப்பியது. அவர்கள் விமானம் மூலம் நேற்று டெல்லிக்கு திரும்பினர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிலர், இந்தியர்களை மட்டும்தான் மெக்சிகோ திருப்பி அனுப்பி யிருப்பதாகவும், வங்கதேசத்தினர், இலங்கை மக்கள் உள்ளிட்டோரை திருப்பி அனுப்பவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளனர்.