அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆட்களுக்கு சாதமாக செயல்பட ரூ 300 கோடி பேரம் – மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்

Must read

அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய நபருக்கு சாதகமாக நடந்து கொண்டால் ரூ. 300 கோடி தருவதாக என்னிடம் பேரம் பேசினார்கள் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.

“வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் பாஜக மீண்டும் அரியணை ஏறுவது வெறும் கனவாகதான் இருக்கமுடியும்” என்று சமீபத்தில் பேசி பாஜக-வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தற்போது அம்பானி குறித்து பேசி இருப்பது அவர்களிடையே மீண்டும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

சத்யபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக இருந்த சமயத்தில் அணில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் அம்மாநில அரசு செய்திருந்த மருத்துவ காப்பீட்டு ஒப்பந்தத்தை 2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரத்து செய்ததுடன், அந்நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்துகொள்ளவும் மறுப்பு தெரிவித்திருந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “அரசியல் மற்றும் பொதுவாழ்வில் பல்வேறு பதவிகளை வகித்த நீண்ட அனுபவம் கொண்டிருந்தாலும் சொந்த மாநிலமான ராஜஸ்தானில் தனக்கென்று ஒரு சிறிய வீடு மட்டுமே உள்ளது” என்று கூறினார்.

“நாட்டிலேயே ஊழல் மலிந்த மாநிலமாக ஜம்மு காஷ்மீர் இருக்கிறது, பிற மாநிலங்களில் ஐந்து சதவீதம் மட்டுமே கமிஷன் தரவேண்டும் என்றால் அங்கு 15 சதவீதம் கமிஷன் என்று ஊழல் ஆறாக ஓடுகிறது.”

“அம்பானி மற்றும் மெஹபூபா முப்தி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த தீவிர ஆர்.எஸ்.எஸ். நபர் என்று இருவருக்கும் சொந்தமான நிறுவனங்கள் தொடர்பான இரண்டு வெவ்வேறு கோப்புகளில் கையெழுத்திட தலா 150 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாக என்னிடம் கூறினார்கள், இருந்தபோதும் அதை முற்றிலும் நிராகரித்தேன்”

“பிரதமரிடம் இதுகுறித்து தெரிவித்ததோடு உங்கள் பெயரை கூறிக்கொண்டு இதுபோன்ற அநியாயங்கள் நடைபெறுகிறது என்று கூறினேன், அவரும் உங்களுக்கு சரியென்று பட்டதை செய்யுங்கள் என்று என்னை சுதந்திரமாக செயல்பட விட்டார், நானும் அந்த கோப்புகளை நிராகரித்தேன்”

“பணம் இல்லாமல் ஏழையாக இருந்தாலும் நேர்மையாக இருந்தால் எவ்வளவு சக்தி படைத்தவர்களையும் எதிர்க்க முடியும், வேளாண் சட்டங்களை திரும்பபெறாவிட்டால், நானே களத்தில் இறங்கி விவசாயிகளுக்காக போராடவும் தயாராக இருக்கிறேன்” என்று பேசினார்.

மேலும், “புதிதாக பதவியேற்கும் அதிகாரிகள் தங்களுக்கு எந்தவிதமான நெருக்கடி வந்தாலும் லஞ்சம் வாங்குவதை தவிர்த்தால் அவர்களால் சமுதாயத்தை முன்னேற்ற நேர்மையாக செயல்பட முடியும்” என்று அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே பேசினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து மேகாலயா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்ட சத்யபால் மாலிக், வேளாண் சட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது முதல் பா.ஜ.க. வுக்கு எதிராக குரல்கொடுத்து வரும் நிலையில், தற்போது அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ். முக்கியப்புள்ளிகளின் நடவடிக்கை குறித்த இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article