ஈரோடு: இடைத்தேர்தல் முடிவடைந்த  கிழக்குத் தொகுதியில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நிறைவடைந்தது.  மாலை 6மணி வரை 74 புள்ளி 69 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஈரோடு கிழக்கு தொகுயில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இருந்த நிலையில், அதில் 74.79 சதவீதமாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்துள்ளனர். அதில், வாக்களித்ததில் 82 ஆயிரத்து 138 பேர் ஆண்கள் என்றும், 88 ஆயிரத்து 37 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, சித்தூரில் உள்ள போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்ட வாக்கு இயந்திரங்கள், கட்சி முகவர்கள் முன்னிலையில், அடுக்கி வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையம் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டள்ள அறை வளாகம் முழுவதும், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கட்டடத்தில் உள்ள முதல் தளம் மறறும் இரண்டாம் தளத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளன. இதனிடையே மாவட்ட தேர்தல் அதிகாரி சிவக்குமார், மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் உடனிருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை 

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆட்சியர், அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனையில் ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி பிரமுகர்களிடம் வாக்கு எண்ணிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.