சிம்லா: இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில்,  காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில்,   முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டியிடு கின்றனர். இதனால், அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், மாநில  முதல்வர் யார் என்பதை பிரியங்கா அறிவிப்பார் என காங்கிரஸ் மேலிடம் தெரிவித்து உள்ளது.

இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சிக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமை ஏற்று பிரசார வியூகங்களை வகுத்தார். இதனால், அங்கு காங்கிரஸ் கட்சி 40இடங்களில் வெற்றிபெற்று, பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி, காங்கிரஸ் கட்சி  ஆட்சி அமைக்கும் நிலைக்குக்கு முன்னேறியுள்ளது. இதற்கிடையில் 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனால் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில், மாநில முதல்வர் பதவிகளை பிடிக்க மூன்று காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில்,  காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் ராஜீவ் சுக்லா, பூபேந்தர் ஹூடா, பூபேஷ் பாகல் ஆகியோர் முன்னிலையில், மாநில முதல்வரை முடிவு செய்யும் அதிகாரம் கட்சி மேலிடத்துக்கு வழங்கப்பட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, மூன்று முதல்வர் நம்பிக்கையாளர்களான மாநிலக் கட்சித் தலைவர் பிரதீபா சிங், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்தை அடைந்து முழக்கங்களை எழுப்பினர். முதல்வர் பதவி தங்களுக்கே வேண்டும் என்று லாபி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இமாச்சல பிரதேச முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா அறிவிக்கிறார். இதை கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இமாச்சல பிரதேச அரசியலில் புதிய திருப்பம்: 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு