ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜூப்ளி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மி நாராயண விஞ்சம். 28 வயதான இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தனது பல் அமைப்பை சரிசெய்வதன் மூலம் தனது முகத்தின் அமைப்பையும் புன்னகையையும் மாற்றி அமைக்க நினைத்தார்.

அதற்காக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள எஃப்எம்எஸ் சர்வதேச பல் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார்.

பல் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் மயங்கி விழுந்ததாக பல்மருத்துவமனையில் இருந்து லக்ஷ்மி நாராயணனின் பெற்றோருக்கு போனில் அழைப்பு வந்துள்ளது.

இதனை அடுத்து பதறிப்போய் பல் மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் அங்கிருந்து தங்கள் மகனை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

லக்ஷ்மி நாராயணனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அளவுக்கு அதிகமாக மயக்கமருந்து கொடுத்த பல் மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்றும் அவரது தந்தை எஃப்எம்எஸ் பல் மருத்துவமனை மீது புகார் அளித்துள்ளதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.