டில்லி,

பிரதமர் மோடியின் சுற்றுப்பயண செலவு ரூ.119.70 கோடி மத்திய அரசால் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு ஏர் இந்தியா விமானத்தை பயன்படுத்திய வகை யில் கட்டணமாக ரூ.119.70 கோடியை பிரதமர் அலுவலகம் செலுத்தியுள்ளது.

பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு இதுவரை 27 வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.

இதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு விமானம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த சூழலில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முன்னாள் கடற்படை வீரர் லோகேஷ் பத்ரா என்பவர் கேட்டிருந்தார்.

அதற்கு, பிரதமர் மோடி மேற்கொண்ட 27 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதாக  தெரிவிக்கப்பட்டது.

இதில் 8 பயணங்களுக்கு ரூ.119.70 கோடி கட்டண நிலுவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பிரதமர் அலுவலகம் செலுத்த வேண்டிய நிலுவையை தொகையை உடனடியாக கட்ட கோரி மத்திய தலைமை தகவல் ஆணையத்தில் லோகேஷ் பத்ரா மீண்டும் முறையிட்டார்.

இந்த மனு குறித்து விசாரணை நடத்திய தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர், பிரதமர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.

அதில் பிரதமரின் பயண கட்டணங்கள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்துடன் தொடர்புடைய தாகும். எனவே, விரைவில் அதை செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான நிலுவை தொகை ரூ.119.70 கோடி கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.