டில்லி

டந்த 2020 முதல் 2021 வரை 2562 செயலி கடன் முறைகேடு புகார்கள் பதியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தனிநபர் கடன் வசதி உள்ளது.  இந்த கடனைப் பெற வாடிக்கையாளர்கள் விண்ணப்பித்து விண்ணப்பம் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் கடன் வழங்குவது வழக்கமாக இருந்தது.   இந்நிலையில் மொபைல் செயலிகள் மூலம் கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த முறையில் விரைவாகக் கடன் கிடைக்கும் என்பதனால் பலரும் விரும்பத் தொடங்கினர்.   ஆனால் இந்த செயலி மூலம் கடன் வழங்கும் போது பல மறைமுக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு அவற்றுக்கும் வட்டி வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டது.  மேலும் வட்டி விகிதமும் அதிகமாவதால் பலராலும் கடனை திருப்பி தர முடியாத நிலை ஏற்பட்டு அவர்களை மிரட்டுவதும் நிகழ்ந்து வந்தது.

இந்த செயலி கடன் குறித்து நாடெங்கும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.  இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 மார்ச் வரை 2562 செயலி மூலம் கடன் குறித்த முறைகேடு புகார்கள் பதியப்பட்டுள்ளன.  இதில் அதிக அளவில் மகாராஷ்டிராவில் 572 புகார்கள் பதிவாகின.

அடுத்தபடியாக, கர்நாடகா- 394 டெல்லி- 352 ஹரியானா- 314 தெலுங்கானா- 185 ஆந்திரப் பிரதேசம்- 144 உத்தர பிரதேசம்-142 மேற்கு வங்கம்-130 தமிழ்நாடு- 57 குஜராத்- 56 எனப் புகார்கள் பதிவாகி உள்ளன”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.