சென்னை:

காவிரி நதி நீர் விவகாரத்தில்  உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக திமுக ஏற்பாடு செய்திருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழக அரசு சார்பில் 22ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், திமுக கூட்டியிருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காவிரி நதி நீர் விவகாரம் குறித்த மேல்முறையீட்டு வழக்கில், தமிழகத்திற்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வர் எடப்பாடிக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால், தமிழக அரசு சார்பில் இதுவரை பதில் ஏதும் வராத நிலையில், திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு  திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை தலைமை செயலகத்தில் சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து காவிரி நதி நீர் தொடர்பான உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் வரும் 22ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக திமுக கூட்டியுள்ள கூட்டத்தை ரத்து செய்வதாக மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மேலும், தமிழக அரசு கூட்டியுள்ள 22ந்தேதி  கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளும் என்றும் அறிவித்து உள்ளார்.

காவிரி மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 16ந்தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில்  காவிரி நதியை உரிமை கோர எந்த மாநிலத்துக்கும் உரிமை இல்லை என்றும், காவிரி நீரை எந்த மாநிலமும் தனியாக உரிமை கோர முடியாது, நதி நீர் என்பது தேசிய சொத்து என்று தெரிவித்த  உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி தண்ணீரை   177.25 டி.எம்.சியாக குறைத்துவிட்டது.

இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.