சேலம்

சேலத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதாக 22 பெண்கள் உள்ளிட்ட 236 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.  எனவே சேலத்தில் இருந்து பல்கலைக் கழகம் செல்லும் சாலை நெடுக, மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பெரியார் பல்கலைக் கழகத்துக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக காரில் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்குக் கருப்புக் கொடி காண்பித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆளுநருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் பிரவீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநகர பொருளாளர் காஜா மொய்தீன் மற்றும் பெண்கள் 22 பேர் உள்பட 236 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.