சென்னை : பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக  அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மீதான வழக்குகளை லோக்ஆயுக்தா நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் ஊழல், நிர்வாக முறைகேடு குறித்த புகார்களை விசாரிக்க, மத்திய அளவில், ‘லோக்பால்’ மற்றும் மாநில அளவில் ‘லோக் ஆயுக்தா’ அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளில், பொது ஊழியருக்கு எதிராக யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். தமிழகத்தில், 2018 நவம்பரில் லோக் ஆயுக்தா சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி, ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி உள்ளார்.

தமிழ்நாட்டில் 10ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு  வந்தது. இதையடுத்து,  கடந்த ஆண்டு (2022) பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது. . இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், பொதுமக்களுக்கு தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். மனுவில், இதன் வாயிலாக, பொது மக்களின் பணத்தை முறைகேடு செய்துள்ளனர். மொத்தம் 1,296.88 ரூபாய் மதிப்பிலான திட்டம் என்றால், ஒவ்வொரு பயனாளிக்கும், 602 ரூபாய் விலையிலான பொருட்கள் கிடைக்க வேண்டும். இதே அளவிலான பொருட்களை, தரமான வகையில் வெளிச்சந்தையில் வாங்கினால், அதன் விலை ஒரு பயனாளிக்கு, 485 முதல் 550 ரூபாய்க்குள் வரும். அதன்படி மொத்தத்தில், 111.80 கோடி ரூபாய் முதல் 251.55 கோடி ரூபாய் வரை, முறைகேடு செய்துள்ளனர். குறைந்தபட்சம் ஒரு பயனாளிக்கு, 50 ரூபாய் என கணக்கிட்டாலும், 107.74 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது.

தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றை தடுக்காத உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 3ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, இந்த முறைகேடு தொடர்பாக, அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி உள்ளிட்டோர் மீதான புகார் குறித்து விரிவாக விசாரணை நடத்த, லோக் ஆயுக்தா அமைப்புக்கு, சென்னை உயர் நீதிமன்ற திபதி சேஷசாயி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மீதான பொங்கல் பரிசு முறைகேடு வழக்கு! செப்.11-ல் இறுதி விசாரணை