சென்னை:  தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – நெல்லை இடையே 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமான தீபாவளி. இந்த ஆண்டு நவம்பர் 12 ஞாயிறு அன்று தீபாவளி  பண்டிகை வருகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறை. இந்த பண்டிகை வார இறுதியில் வருவதால் முன்னதாக ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்து பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால்,  நவம்பர் 9ஆம் தேதி முதல்  வெளியூர் செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதையொட்டி, தமிழ்நாடு அரசு வழக்கமான இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளையும் இயக்குவதாக அறிவித்து உள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து 10,975 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 5,920 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.  அதுபோல,  தீபாவளி முடிந்த பின்னர் மீண்டும் திரும்பும் வகையில் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய சென்னை கோயம்பேட்டில் 10, தாம்பரத்தில் 1 என கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து கழகத்தின் tnstc.in என்ற இணையதளத்திலும், TNSTC மொபைல் ஆப் மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தீபாவளிக்காக சென்னை நாகர்கோயில் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. அதில் இருக்கைகள் நிரம்பிய நிலையில், தற்போது சென்னை நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.  ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை – நெல்லை இடையே சிறப்பு  ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை – நெல்லை இடையே நவ.8, 15, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு  ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.15க்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45க்கு நெல்லை சென்றடையும்.

நவ.9, 16, 23ல் ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் அதிகாலை 3.45க்கு சென்னை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.