டினா தாபி, இப்பெயர் இப்போது இந்திய அளவில் அடிக்கடி சமூகவலைதளங்களில் அடிபடும் பெயராகிவிட்டது. 2015 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளின் முதலிடம் பிடித்தவர். இவருக்கும் இவருக்கு அடுத்த இடம் பிடித்த அதர் அமீர் உல் ஷஃபி கான் என்ற காஷ்மீரை சேர்ந்த மாணவருக்கும் இடையே மலர்ந்த காதல்தான் இன்று சமூகவலைதளங்களில் ஹாட் டாப்பிக்!

tinadhabi

சிவில் சர்வீஸ் முடித்த பின்னர் நடைபெறும் பயிற்சி வகுப்புகளின் போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது. டினாவை பார்த்த மாத்திரத்தில் மனதை பறிகொடுத்துவிட்டாராம் அமீர். டினாவுக்கும் பிடித்துப்போகவே இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்துவிட்டார்கள். இருவருமே தங்கள் காதலை மறைக்கவில்லை. தாங்கள் இருவரும் சேர்ந்து விடுமுறை நாட்களில் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வதை, இணைந்து எடுத்துக்கொண்ட படங்களை தங்கள் முகநூலில் பகிர்ந்து கொள்ளுகிறார்கள். எங்கள் இருவரின் பெற்றோர்களும் எங்கள் காதலை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
டினா தாபி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அமீர் ஒரு காஷ்மீரி முஸ்லீம். இதைச் சொல்லி, இவர்களின் காதலை கடுமையாக சமூகவலைதளங்களில் விமர்சிக்கிறார்கள் சிலர். வேறு பலர் ஆதரித்து கருத்து தெரிவிக்கிறார்கள்.
விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகும் இந்த ஜோடி, சமூகவலைதளங்களில் தங்களைப்பற்றி வரும் விமர்சனங்களை தற்போது பார்ப்பதே இல்லை.“எங்களைப் பற்றி வரும் செய்திகள் இருவரது மனதையும் பாதிக்கவே செய்திருக்கிறது. அதனால் நாங்கள் இப்போது எங்களைப்பற்றி வரும் செய்திகளை படிப்பதே இல்லை” என்கிறார் டினா.
மேலும், “எங்கள் காதலை, திருமணத்தை எதிர்மறையாக விமர்சிப்பவர்கள் சிலரே! அவர்களைக் குறித்து எங்களுக்கு கவலையில்லை” என்கிறார்.
மேலும், “தலித் சமூக இளம் மாணவர்கள் என்னை முன்மாதிரியாக வைத்திருப்பதாக எனக்கு செய்தி அனுப்புகிறார்கள். நான் ஒரு முன்மாதிரி என்னும் அளவுக்கு இன்னும் எதுவும் சாதிக்கவில்லை. சிவில் சர்வீஸ் என்பது ஒரு தேர்வு அவ்வளவுதான். ஆனால் வேலைக்கு வந்த பின்னர் என்ன சாதிக்கப்போகிறேன் என்பதே எனக்கு முக்கியம். நான் ஒரு சாதனையாளர் என்று என்னை அழைத்துக்கொள்ள இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியதிருக்கிறது” என்கிறார் டினா அடக்கமாக!