கோல்கட்டா:

புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களைப்போல கள்ள நோட்டு அச்சடிக்க முடியாது என்று சொல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு இந்திய – வங்கதேச எல்லையில், ரூ. 6.96 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

எல்லை பாதுகாப்பு படையின், 24வது பட்டாலியனுக்கு 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் கடத்தப்படுவதாக தகவல் வந்ததது. இதையடுத்து வீரர்கள், சோரி – அனந்தபுர் எல்லைப்பகுதியில் நேற்று இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது எல்லைப் பகுதியில் ஒரு பை வீசப்பட்டு கிடந்தது. அதை கைப்பற்றி சோதனை செய்தபோது, ரூ. 6.96 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. வங்க தேச எல்லை பகுதியில் இருந்து இந்திய எல்லை பகுதிக்குள் இந்த ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு இருக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய 2000 ரூபாய் நோட்டுக்களைப் போல கள்ள நோட்டு அச்சடிக்க முடியாது என்று மத்திய அரசு சொல்லி வந்த நிலையில் தொடர்ந்து கள்ளநோட்டுகள் பிடிபடுவது அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும், வங்காள தேசத்தில் பதுங்கியிருக்கும் பயங்கராவாதிகளின் செயலாக இது இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.