சாமானிய மக்களின் கண்ணில் படாமல் ஒளிந்திருக்கும் 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து நீக்கப்போவதாக ஆர்.பி.ஐ. இன்று அறிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் புழக்கத்திற்கு வந்த 2000 ரூபாய் நோட்டு ஏ.டி.எம்.-மிலும் வராமல் அச்சடிக்கப்படாமலும் மத்திய அரசுக்கு பணவிரயத்தை ஏற்படுத்திய நிலையில் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் செலவாவது மிச்சம் என்ற ரேஞ்சுக்கு ஆர்.பி.ஐ. எடுத்துள்ள இந்த நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது :

“எதிர்பார்த்தது போலவே, அரசாங்கம்/ஆர்பிஐ ரூ.2000 நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது.

அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டு சிறந்த பரிமாற்ற ஊடகம் அல்ல என்று 2016 நவம்பரில் நாங்கள் சொன்னோம், அது சரியென்று தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ரூ.500 மற்றும் ரூ.1000 பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க ரூ.2000 நோட்டு கொண்டுவரப்பட்டது.

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அரசாங்கம்/ஆர்பிஐ ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1000 ரூபாய் நோட்டை அரசாங்கம்/ஆர்பிஐ மீண்டும் அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்

பணமதிப்பு நீக்கம் முழு வட்டத்திற்கு வந்துவிட்டது!” என்று பதிவிட்டுள்ளார்.

2000 ரூபாய் நோட்டுகள் புகழக்கத்தில் இருந்து நீக்கம்… செப்டம்பர் 30 ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள அவகாசம்…