சென்னை: பக்தர்கள் கோவில்களுக்கு காணிக்கையாக செலுத்திய நகைகளில் சுமார் 2ஆயிரம் கிலோ நகைகள்  உருக்கப்பட  இருப்பதாக தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அறநிலையத்தறையின் கீழ் உள்ள இந்து கோவில்களில் பக்தர்கள் தங்களது வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டதற்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட நகைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் குவிந்து கிடக்கிறது. இதை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, அதன்மூலம் வருமானம் ஈட்ட முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடிவெடுத்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையிலும் கோவில் நகைகளை உருக்குவதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது.

இநத் நிலையில், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு,  கோவில்களில் உள்ள 9 ஆயிரத்து 857 அர்ச்சகர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தவர்,  தமிழகத்தில் 4 லட்ச ஏக்கருக்கும் அதிகமாக திருக்கோவில்களின் நிலங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவைகளில் ஆக்கிரமிப்பு நிலங்களை முழுமையாக திரும்பப் பெற பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக கோவில்களில் உள்ள சுமார் 2 ஆயிரம்கிலோ நகைகள் உருக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.