சென்னை பெருநகரப் பகுதிக்கான மூன்றாவது மாஸ்டர் பிளான் (2027-2046)க்கு தேவையான ஆவணங்கள் மற்றும் தரவுகளை தயாரிக்கும் பணியை சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம் (சி.எம்.டி.ஏ) துவங்கியுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) உள்ளிட்ட மற்ற துறைகளின் அதிகாரிகளுடன் நேற்று வெள்ளியன்று நடைபெற்ற தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பதற்கான துறைசார் கூட்டம் நடைபெற்றது. சுற்றுச்சூழல், நகர்ப்புற வளர்ச்சி, இயற்கை வளங்கள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்த விவாதங்களில் இந்த குழு ஈடுபட்டது.

மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி பல ஆண்டுகளுக்கு முன்பு கையிலெடுத்த நிலையில் 2024 ம் ஆண்டில் பல்வேறு மண்டலங்களில் உள்ள கடற்கரைகள் அழகுபடுத்தப்படும் என்று சிஎம்டிஏ மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்திருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு சிஎம்டிஏ-வுடன் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சியும் சென்னை கடற்கரையை அழகுபடுத்தும் திட்டங்களை செயல்படுத்த முன்வந்துள்ளது.

இதன் அடிப்படையில் சிஎம்டிஏ மற்றும் ஜிசிசி அதிகாரிகள் மேற்கொண்ட விவாதத்தில் எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம், மெரினா ஆகிய பகுதிகளுக்கு கடலோர மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளவும், பார்வையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை செயல்படுத்தவும் அதற்காக கடற்கரைகளுக்கு அருகில் உள்ள அரசு நிலங்கள் கண்டறியப்பட ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரப் பகுதிக்கான மூன்றாவது மாஸ்டர் பிளான் (2027-2046)க்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பதற்கு முன்னதாகத் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, சென்னை மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பகுதிகள் 52 கிமீ கடற்கரையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்புடன் கூடிய 20 கடற்கரைகள் அமைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.