ஜெனிவா: ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸை ஃபைசர் தடுப்பூசி 70 சதவீதம் வரை கட்டுப்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் பூஸ்டர் டோஸ் தேவைப்பட வாய்ப்பில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவி வரும் கொரோனா தொற்றின் பிறழ்வு வைரசான ஒமிக்ரான், இந்தியா உள்பட உலகின் 77 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிகள் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி உள்ளன.

ஏற்கனவே கொரோனா தொற்று பரவலின்போது, தடுப்பூசிக்கு பின், கொரோனா தொற்று வர வாய்ப்பு இல்லை. அப்படியே தொற்று வந்தாலும் எந்தவித விபரீதத்தையும் ஏற்படுத்தாது. தடுப்பூசி போட்ட பின், முழுமையாக எதிர்ப்பு சக்தியான ‘ஆன்டிபாடி’கள் உற்பத்தியாகி உயிரை காக்கும் என உலக நாடுகள் கூறி வந்தனர். அதே நேரத்தில் சில ஆய்வாளர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு திரும்பவும் வைரஸ் தொற்று வர வாய்ப்பு உள்ளதாகவும், ஆனால் உயிரிழப்பு ஏற்படாது என்றும் கூறப்பட்டன.

இந்த நிலையில் ஒமிக்ரான் பாதிப்பை தடுப்பூசிகள் கட்டுப்படுத்தாது என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது சற்றே ஆறுதலை கொடுத்துள்ளது.

இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு 61ஆக அதிகரித்து உள்ளது. தொற்று பரவலை தடுக்கு தற்போது நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்தராது என்று மத்திய சுகாதாரத்துறை மருத்துவர் வி.கே.பால் கூறியுள்ளார்.

இந்த நிலையில்,  ஒமிக்ரானை ஒழிப்பதில் ஃபைசர் நிறுவன தடுப்பூசி 70% செயல்படுகிறது என ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். 2டோஸ் பைசர் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து எளிதாக தப்பி விடுகின்றனர் என ஒமிக்ரான்  பரவிய தென்ஆப்பிரிக்காவில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒமிரான் தொற்றை எதிர்த்து போராடுவதில் பைசர் நிறுவன தடுப்பூசி சிறப்பாக பணியாற்றுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  அதனால் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவு பாதிப்பு ஏற்படாது என்றும், உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தென்ஆப்பிரிக்காவில் மீண்டும் தொற்று ஏற்பட ஒமிக்ரான் 90% காரணமாக உள்ள நிலையில் இதனை தடுக்கும் மருந்தாக பைசர் தடுப்பூசி இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனால் உலக நாடுகள் பைசர் தடுப்பூசிகளை பெற ஆர்வம் காட்டி வருகின்றன.