அமெரிக்காவின் சான் டியாகோ கடற்கரையில் மனித கடத்தலில் ஈடுபட்ட படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் பலியானதாகக் கூறப்படுகிறது.
மே 5ம் தேதி காலை நடைபெற்ற இந்த விபத்தில் கடலில் மூழ்கிய 14 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான், அவனது 10 வயது தங்கையின் உடல் கிடைக்காமல் போனதை அடுத்து அவர் காணாமல் போனதாகக் கருதப்படுகிறது.
இவர்களின் பெற்றோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் சிறுவனின் தந்தை கோமா நிலையில் இருப்பதாகவும் தாயார் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில் இதுகுறித்த விசாரணையை அமெரிக்க காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோரின் ஒரு பெரிய குழுவில் அந்தக் குடும்பமும் ஒன்று என்றும் டெல் மார் அருகே படகு கவிழ்ந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் வெளிநாட்டினரை அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைக்கும் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த மனித கடத்தல் கும்பல் இதில் ஈடுபட்டிருப்பதும் படகு விபத்தில் இருந்து 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக படகுகளை ஒட்டிய இரண்டு மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்பு இருப்பதாக மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.