ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தியது அமெரிக்கா தான் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெளிவுபட கூறினார்.
இருந்தபோதும் டிரம்பின் இந்த பேச்சுக்கு இந்தியா இதுவரை எதிர்ப்போ ஆதரவோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “வர்த்தக செல்வாக்கு மற்றும் இராஜதந்திர அழுத்தம் மூலம் தனது நிர்வாகம் ஒரு “அணுசக்திப் போரை”த் தடுத்ததாகக் கூறினார்.
மேலும், “நாங்கள் ஒரு அணுசக்தி மோதலை நிறுத்தினோம். அது ஒரு மோசமான அணுசக்திப் போராக இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், எனவே நான் அதைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய தாக்குதலில் மழுப்பலாக செயல்படும் டிரம்ப் காசா விவகாரத்தில் தனது ஆளுமையை காட்டி வருகிறார் இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பான விவகாரத்தில் தன்னை ஒரு அமைதித் தூதுவராக நிலை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
“போரை நிறுத்தினால் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்வோம் இல்லையென்றால் நாங்கள் வர்த்தகத்தை நிறுத்துவோம்” என்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தியதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
உடனடியாக அதை ஏற்று அவர்கள் செயல்பட்டார்கள், “நான் பயன்படுத்திய விதத்தில் வேறு யாரும் ஒருபோதும் வர்த்தகத்தை போர் நிறுத்தத்திற்கு உண்மையில் பயன்படுத்தியதில்லை” என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவின் இந்த ராஜதந்திரம் தாங்கள் விரும்பிய பலனை அளித்ததாகவும் அதை அடைய உதவிய துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகிய இருவரையும் அவர் பாராட்டினார்.
டிரம்பின் பேச்சில் ஒரு அதிகார தோரணை இருந்தபோதிலும், இதுகுறித்து இந்தியா எந்தவொரு அமெரிக்க மத்தியஸ்தத்தையும் இதுவரை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை.