திருப்பதி

திருப்பதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழுடன் வரவில்லை எனில் தரிசனம் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் இரண்டாம் அலை கொரோனா பரவல் அதிகரித்ததால் திருப்பதியில் தர்ம தரிசனம் நிறுத்தப்பட்டது.   ஆனலைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசனம்,  சேவை டிக்கட்டுகள், விஐபி தரிசனம் ஆகியவை மட்டும் அனுமதிக்கப்பட்டது.  தற்போது தொற்று குறைந்து வருகிறது. எனவே கடந்த 8 ஆம் தேதி முதல் சோதனை முறையில் சித்தூர் மாவட்ட மக்களுக்கு மட்டும் தினசரி 2000 பேருக்குத் தர்ம தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.,

அது வெற்றி அடைந்ததால் கடந்த 20 ஆம் தேதி முதல் அனைத்து இடங்களில் இருந்து வரும் பக்தர்களுக்குத் தர்ம தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தினசரி 8000 டோக்கன்கள் தர்ம தரிசனத்துக்கு வழங்கப்பட்டன.  தற்போது புரட்டாசி மாதம் என்பதால் ஏராளமானோர் டோக்கன் வாங்கக் கூடுகின்றனர்.  எனவே தர்ம தரிசன டோக்கன்களையும்  ஆன்லைனில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 25 ஆம் தேதி முதல் தர்ம தரிசன டோக்கன்கள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு உ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  திருப்பதிக்குத் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ் கொண்டு வர வேண்டும். அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் வேண்டும்.  இல்லையெனில் தரிசனத்துக்கு அனுமதி இல்லை” என அறிவிக்கப்பட்டுள்ளது.