1988:  ஆளுநர் கடிதமும்.. ஆட்சிக் கலைப்பும்

Must read

ஜானகி

நினைவுச் சுவடுகள்:

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. இரு பிரிவாக பிளவுபட்டது. ஜெயலலிதா, ஜானகி ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் பிரிந்து நின்றனர்.

யார் முதல்வர் ஆவது என்று இப்போது போலவே அப்போதும் அதிமுகவுக்குள் பிரச்சினை வெடித்தது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.

அந்த சமயத்தில் ஆளுநர் குரானாவிடம் இருந்து ஜானகி அணியினருக்கு  ஒரு தகவல் வந்தது. ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், சட்டமன்றத்தில் 118 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்பதை, நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.  சபையில் இருக்கும் எம்.எல்.ஏக்களில் பெரும்பான்மையை நிரூபித்தாலே போதும் என்பதுதான் அந்த தகவல்.

மேலும், “ஜானகி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால்,  சட்டமன்றத்தில், அதிமுகவிற்கு அடுத்த இடத்தில் உள்ள இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்” என்று செய்தியாளர்களிடம் ஆளுநர் குரானா தெரிவித்தார்.

1988 ஜனவரி 28ம்தேதி காலை…   சட்டமன்றம் கூடியது.

அப்போதைய சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன், ஜானகி அணி தளர்க்தர்களில் ஒருவர். வானளாவிய அதிகாரத்துக்குச் சொந்தக்காரர் அல்லவா?

அன்று சட்டசபை கூடியதும், “இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.ஜி.செல்லப்பா, சொர்ணலிங்கம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், துரை கிருஷ்ணமூர்த்தி, டி.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக எனக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்” என்றார் அவர்.

அது மட்டுமல்ல.. அடுத்து, ஜானகி அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், சபையை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் ராஜினாமா செய்ததாக அவர் அறிவித்த  காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்  ஐவரும் சபைக்கு வந்தனர். கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டீர்களே என்று இதர காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் மீது பாய்ந்தனர். கைகலப்பு.

பிறகுதான் தெரிந்தது அந்த ஐவரும், தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் பாண்டியனிடம் சொல்லவே இல்லை. விசயம் தெரிந்து அவர்கள் அனைவரும் சமாதானம் அடைந்தனர்.

பிறகு, நண்பகலில் மீண்டும் சபை கூடியது. அடுத்த அதிரடியை அறிவித்தார் சபாநாயகர் பாண்டியன்.

அ.தி.மு.கவின் ஜெயலலிதா அணியைச் சேர்ந்த நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ். திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன், சவுந்திரராஜன் ஆகியோர் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தார்.

இப்போது சட்டமன்றத்தில் மீண்டும் கலவரம் வெடித்தது.  நாற்காலிகள், செருப்புகள், ஒலிப்பெருக்கிகள் பறந்தன.    நிலைமையைச் சமாளிக்க காவல் ஆணையர் வால்டர் தேவாரம் தலைமையிலான காவலர்கள் சட்டமன்றத்தில் நுழைந்து தடியடி நடத்தினர். அதன்பிறகுதான் கலவரம் அடங்கியது.

இந்த களேபரத்துக்குப் பிறகு சட்டமன்ற கூடத்தின் கதவுகள் சாத்தப்பட்டன.

அப்போது சபையில் 110 பேர்தான் இருந்தனர்.

நம்பிக்கை  தீர்மானத்தை ஆர்.எம்.வீரப்பன் முன் மொழிந்தார். 99 வாக்குகள் பெற்று ஜானகி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் பாண்டியன் அறிவித்தார்.

இதன் பிறகு, ஆளுநர் குரானா மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அதில், “தமிழ்நாட்டில் அரசு எந்திரம் முற்றிலுமாக செயலிழந்து விட்டது என்பதை நடந்துள்ள சம்பவங்கள் பிரதிபலிக்கின்றன. ஜானகியின்  சிறுபான்மை அரசால் நிர்வாகம் நடத்த முடியாது என்பது வெளிப்படையாக தெரிந்து விட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து 1988ம் ஆண்டு ஜனவரி 30ம்தேதி தமிழக சட்டமன்றம் கலைக்கப்பட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

ஆக, தற்போதைய சூழலில் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டிய சம்பவம் இது.

 

More articles

Latest article