மிழகத்தின் நீர் ஆதாரங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையைப் போக்கி நடவடிக்கை எடுக்க தமிழக அரசை  உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமிழக ஆளுநர் வித்தியாசாகருக்கு,  அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு  தலைவர் பி.ஆர். பாண்டியன் கடிதம் எழுதி உள்ளார்.

அனைவருமே தற்போதைய தமிழக அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்டு கவர்னரை அணுகிக்கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினையை சுட்டிக்காட்டியிருக்கிறார் பி.ஆர். பாண்டியன்.

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு இதுவரை 270த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சியால் இறந்துள்ளனர். இது மேலும் தொடர்வது வேதனை அளிக்கிறது இந்நிலையில் வர்தா புயல், வறட்சியால் பாதித்த பகுதிகளை மத்தியக்குழு பார்வையிட்டு பல மாதங்கள் கடந்து விட்டன. மத்திய அரசு இதுநாள் வரை பாதிப்புக்குறித்து அறிவிப்பு வெளியிடாதது வேதனை அளிக்கிறது.

பி.ஆர். பாண்டியன்

தமிழக அரசின் சார்பில் வறட்சி நிவாரணம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது, இதுவரை வழங்கப்படவில்லை, தமிழகம் முழுமையிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தும், குளம், குட்டை, ஏரிகள் வறண்டும், குடிநீருக்கு வழியின்றி பொதுமக்களும், கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரின்றி வறண்டதால் அணைகளில் விரிசல் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது

இச்சூழ்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கேரள அரசு, பவானி, பாம்பாற்றின் குறுக்கே வேகமாக அணைகளை கட்டி வருகிறது.

கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்புப்படி தண்ணீர் தர மறுத்ததோடு ராசி மணல், மேகதாது அணை கட்டுமானப் பணிகளை துவங்க முயற்சிக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உச்ச நீதிமன்ற காவிரி குறித்த வழக்கும் பிப் 21க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளை உயர்த்தி வருகிறது இதனால் தமிழகத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண சூழ்நிலைகளால் தமிழக அரசு செயல்படாமல் முடக்கி வைக்கப்பபட்டுள்ளது. எனவே தாங்கள் விரைந்து சட்டத்திற்குட்பட்டு உரிய அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆட்சி அமைப்பது பற்றியான நடவடிக்கைகளை முடிவுக்கு கெண்டுவந்து தமிழக அரசை செயல்பட அனுமதித்து தமிழகத்தையும், விவசாயிகளையும், பொது மக்களையும் பாதுகாத்திட முன்வர வேண்டும்.

வறட்சி நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும். காலம் கடத்தப்படுமேயானால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது” என்று தனது கடிதத்தில் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பாண்டியன் தெரிவித்துள்ள தகவல்கள் அதிரவைக்கின்றன. அரசியல் சூழலை மட்டும் யோசிக்காமல்,இந்த விசயத்தில் கவர்னர் கவனம் செலுத்துவாரா?