தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்படும் என்ற யூகத் தகவல் பரவியிருக்கிறது.

தமிழகத்தில்  ஆளுங்கட்சிக்குள் அதிகாரப்போட்டி உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் பூடகமாகவே இருக்கின்றன.

மகராஷ்டிரா கவர்னராக இருக்கும் வித்தியாசகர், தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக இருந்துவருகிறார்.  தமிழகத்தில் இக்கட்டான சூழல் நிலவும் நிலையில், அவர் என்று சென்னைக்கு வருவார் என்பதே கணிக்க முடியாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று சென்னை வந்த கவர்னர், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவையும் தனித்தனியே சந்தித்தார். இதையடுத்து மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றையும் அனுப்பினார்.

இந்த நிலையில், இன்று இரவு இன்னொரு அறிக்கையை மத்திய அரசுக்கு அவர் அனுப்பியதாகவும், அதில், “தற்போதைய சூழலில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

முன்னதாக, இன்று ஆளுநர் வித்தியாசாகர் தமிழக டிஜிபி ராஜேந்திரன், தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ் ஆகியோரை சந்தித்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆலோசித்தார்.

இதனால் தமிழகத்தில் குடிரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்ற யூகச் செய்தி மேலும் பலப்பட்டது.

ஆனால் இன்று அறிக்கை எதையும் ஆளுனர், மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என்று ஆளுனர் மாளிகை  மறுத்துள்ளது.

ஆனாலும், குடியரசுத்தலைவர்  ஆட்சி அமல்செய்யப்படும் என்ற யூகமே மேலோங்கி இருக்கிறது.

மேலும், குடியரசு தலைவர் ஆட்சிக்கு பிறகு விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் என்றும், அப்போது எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைக்கும் என்பவது வரை பலவித யூகங்களை சமூக வலைதளங்களில் சிலர் பதிந்துவருகிறார்கள்.

அவர்களில் பலரும் குறிப்பிடும் கூட்டணிகள் இவைதான்:

அ.தி.மு.க. (சசிகலா), ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள்

அ.தி.மு.க.  (ஓ.பி.எஸ்.), பாஜக, சி.பி.ஐ., இந்திய ஜனநாயக கட்சி,

தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ்,  தே.மு.தி.க., சி.பி.எம்., ஆகிய கட்சிகள் கூட்டணி வைக்கும் என்றும், கடந் தேர்தலைப்போலவே பா.ம.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து நிற்கும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.