பெய்ஜிங் :
சீனாவுக்கு ஆதரவாக தவறான தகவல்களை பரப்பியதாக கூறப்படும் 1,70,000 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.
அமெரிக்க சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர், சீனாவின் செல்வாக்கை உயர்த்தவும் பெய்ஜிங்கை ஆதரிக்கவும் பயன்படுத்தப்பட்ட 1,70,000 க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை நீக்கியது. சீன அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்ட இந்த சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் சீன அரசாங்கத்திற்கு உகந்த ஆன்லைன் தகவல்களை பரப்புகின்றன. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புகின்றன.
23,750 பிரதான ட்விட்டர் கணக்குகளும், அதில் போடப்படும் டிவீட்டுகளை ரீ-ட்வீட் செய்யும் சுமார் 1,50,000 இணை கணக்குகளையும் முடக்கி வைத்துள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
மேலும், “சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான தகவல்களை, சீன மொழியில் முக்கியமாக சீன பிராந்தியத்தில் ட்வீட் செய்கின்றன, அதே நேரத்தில் ஹாங்காங்கின் அரசியல் நிலை குறித்த தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பிவருகின்றன” என்று ட்விட்டர் விளக்கமளித்துள்ளது.
நீக்கப்பட்ட 23,750 ட்விட்டர் கணக்குகள் மற்றும் அதன் ட்வீட்களில் உள்ள உள்ளடக்கம் பற்றி பகுப்பாய்வு செய்த ஆஸ்திரேலிய ஸ்ட்ராட்டஜி பாலிசி இன்ஸ்டிடியூட் (ASPI) மற்றும் அமெரிக்க ஸ்டான்போர்ட் இணைய ஆய்வகம், இந்த கணக்குகளில் 78.5% கணக்குகளுக்கு பாலோயர்கள் இல்லை, பாலோயர்கள் உள்ள மற்ற கணக்குகளில் 95 சதவீத கணக்குகளுக்கு 8 பேருக்கும் குறைவான பாலோயர்களே உள்ளனர் என்றும் இந்த கணக்குகள் மூலம் 3,50,000 ட்வீட்கள் அனுப்பியுள்ளதாக கண்டுபிடித்துள்ளது.
சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய இந்த ட்விட்டர் கணக்குகளில் பெரும்பாலானவை பெய்ஜிங் நேரப்படி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சீன அரசாங்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான ட்வீட்களை அனுப்பியுள்ளதாகவும், வார இறுதி நாட்களில் ட்வீட்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். வழக்கத்திற்கு மாறான இத்தகைய இடுகைகள் இந்த கணக்குகளின் நம்பகமற்றத் தன்மையைக் காட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்தனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பதிவிடுவது தொடர்பான “மிகவும் சாத்தியமான” போலி ட்விட்டர் கணக்குகளை கண்டுபிடித்ததாக யு.எஸ். வெளியுறவுத்துறை ஏற்கனவே கடந்த மாதம் கூறியது நினைவுகூறத்தக்கது.
இருப்பினும், தற்போது அவர்கள் நீக்கிய கணக்குகளுக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், சீன அரசாங்க ஆதரவு தொடர்பான ட்விட்டர் கணக்கை ட்விட்டர் மூடியதற்கு பதிலளித்தார், ட்விட்டர் போலி தகவல்களைக் குறைக்க விரும்பினால், முதலில் சீனாவை அவதூறு செய்யும் ட்விட்டர் கணக்கை மூட வேண்டும் என்று கூறினார். தவறான தகவல்களுக்கு சீனா தான் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், பல தளங்களில் சீனாவைப் பற்றி தவறான புரிதல்கள் உள்ளன என்றும் அவர் கூறினார். சீனாவின் கருத்தை நடுநிலையுடன் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தவறான தகவல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ரஷ்யா தொடர்பான 1,152 கணக்குகளையும், துருக்கி அரசாங்கத்துடன் தொடர்புடைய குறைந்தது 7,340 கணக்குகளையும் மூடிவிட்டதாக ட்விட்டர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த கணக்குகள் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவாக தவறான அல்லது அரசியல் தகவல்களை பரப்புவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுபோல் எத்தனை கணக்குகளை முடக்கியது என்பது குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.