வாஷிங்டன்: லாஃபாயெட் சதுக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட இதர முக்கியஸ்தர்களுடன் தான் நடந்து சென்றதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் பென்டகனின் முதன்மை தளபதி ஜெனரல் மார்க் ஏ.மில்லே.

அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட், காவல்துறையினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, வெள்ளை மாளிகை அருகே லாஃபாயெட் சதுக்கத்தில் அமைதி வழியில் நடைபெற்ற போராட்டமும் ஒன்று.

இந்த இடத்திலிருந்த போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய பிறகு, லாஃபாயெட் சதுக்கத்தில் அமைந்திருந்த, போராட்டத்தால் சேதமடைந்த ஒரு தேவாலயத்தைப் பார்வையிட, நடந்தே சென்றார் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க அதிபருடன், பாதுகாப்புத் துறை செயலர் மார்க் டி.எஸ்பர் மற்றும் இதர மூத்த ஆலோசகர்கள் உடன் நடந்து சென்றனர். அப்போது, ஜெனரல் மார்க் ஏ.மில்லேவும் உடன் நடந்துசென்றார்.

ஆனால், அவரின் அந்த செயல் கடும் சர்ச்சையைக் கிளப்பியது. பென்டகன் தளபதியின் செயல், உள்ளூர் அரசியல் நடவடிக்கையில் ராணுவம் தலையிடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார் ஜெனரல் மில்லே. தான் அவ்வாறு அதிபருடன் சென்றிருக்கக்கூடாது எனவும், இதனால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்பட தான் காரணமாகிவிட்டேன் என்றும், இது தனக்கு ஒரு பாடம் எனவும் கூறியுள்ளார் அவர்.