சென்னை: தமிழகம் முழுவதும் 17 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்த இடமாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி, மார்ச் முதல் அல்லது 2வது வாரத்தில்அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக, வெளிப்படையாகவும், அமைதியாகவும் தேர்தலை நடத்தும் வகையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் காவல்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான துறைகளின் அதிகாரிகள் அனைவரும் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலரும் கடந்த ஒரு மாதமாகவே பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்களான வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்யும் உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஊரக வளர்ச்சித் துறையிலும் இதுபோன்ற பணியிடமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 68 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், உதவி இயக்குநர்கள் 164 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக காவல் துறையிலும் தொடர்ந்து ஏராளமான காவல்துறை அதிகாரிகள், காவல்துறையினர்  இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 17 டிஎஸ்பிக்களை டிஜிபி சங்கர் ஜிவால் இடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.