சென்னை: கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சியில் குறிப்பிட்ட 4 ஆண்டுகளில் ரூ. 17 கோடி முறைகேடு  நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 52 கல்லூரி முதல்வர்கள் நாளை (21ந்தேதி) நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுக்கிடையேயான 4 ஆண்டு காலத்தில்  பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் 17 கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக கூறப்பட்ட புகாரின்பேரில்,   52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்தியது. அதில், மேனேஜ்மெண்ட் கோட்டாவில் (Management Quota) சேர்ந்த மாணவர்களுக்கான உதவித்தொகையில் 4 கோடி ரூபாயும், பெரம்பலூரில் இல்லாத கல்லூரிக்கு 58 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த முறைகேட்டில் பல பாலிடெக்னிக் கல்லூரி, பயிற்சி கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி என 52 கல்லூரிகளுக்கும், நிர்வாக அலுவலர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும்,  ஒரே மாணவனுக்கு வெவ்வேறு அடையாள அட்டையை அடிப்படையாக வைத்து பல முறை பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகையில் 13 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும், மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகையை கல்லூரி பயன்பாட்டுக்காக பயன்படுத்தி 24 லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதும் தெரிய வந்ததுள்ளது. மொத்தம்   17 கோடி ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட 52 கல்லூரிகளைச் சேர்ந்த  முதல்வர்கள் நாளை (21ந்தேதி) விசாரணைக்கு லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில்  ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.