சென்னை : தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்வர் 4-ம் தேதி வியாழன்று வருகிறது. அதையடுத்து, வெள்ளி ஒருநாள் மட்டும் வேலைநாள். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. இதனால், இடையில் ஒருநாள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும். இதனால், சென்னை மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மனநிலையில் உள்ளனர்.
இதனால், தீபாவளி பண்டிகையின்போது, பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், தீபாவளிக்காக, 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ‘தீபாவளியை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 16,540 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பேருந்துங்கள் நவம்பர் 1ந்தேதி முதல் இயக்கப்படும் என்றார்.
சிறப்பு பேருந்துகள் மாதவரம், கே.கே நகர், தாம்பரம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்பட 6 இடங்களில் இருந்து இயக்கப்படும் என்றும், திபாவளி பண்டிகை முடிந்து திரும்புபவர்களின் வசதிக்காக 17,719 பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
தீபாவளிக்கு முந்தைய நாள், முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றவர், ஆயுத பூஜையை முன்னிட்டு 800 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறினார்.
ஆம்னி பேருந்துகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.