டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்கும் பணி தொடங்கி உள்ளது. இன்று அங்கிருந்து 219 பேருடன் இந்தியா வரும் விமானத்தில் 16 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ரஷியா உக்ரைன் மீது இன்று 3வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் வான்வெளியை ரஷியா தடுத்துள்ளதால், அங்குள்ள வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே ஏராளமானோர் உக்ரைனை விட்டு சாலை வழியாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில்,அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்தியஅரசு தீவிரமாக இறங்கி உள்ளது. உக்ரைனின் எல்லை நாடுகளை சேர்ந்த அரசுகளிம் பேசி, அங்கிருந்து இந்தியர்களை அழைத்து வர முன்வந்துள்ளது. இதுதொடர்பான தகவல்களை அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 219 இந்தியர்கள், சிறப்பு விமானத்தில் ருமேனியாவில் இருந்து புறப்பட்டுள்ளனர். இவர்களில்  16  பேர் தமிழர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ருமேனியாவின் புக்காரெஸ்ட்டிலிருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட முதல் விமானத்தில் தமிழக மாணவர்கள் வருவது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.   இவர்களுக்கான பயண கட்டணங்களை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

அதுபோல ஹங்கேரி தலைநகர் புக்காரெஸ்ட் வழியாக இரண்டாவது விமானத்தின் மூலம் இன்று நள்ளிரவு 2 மணியளவில் இந்தியர்கள் டெல்லிக்கு அழைத்துவரப்படுகின்றனர்.

எந்தெந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் எத்தனை போர் என்ற முழுமையான விவரம் நாளை காலையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.