1528 முதல் 2019 வரை: 500 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அயோத்தி ராமஜென்ம பூமி சர்ச்சை…. முழு விவரம்

Must read

அயோத்தி…. இந்தியாவின் இதிகாசமான இராமாயணத்தில் அயோத்தியும், அயோத்தியை ஆண்ட தசரதனும், அவரது பிள்ளையான ராமர், அவரின் ஆட்சி குறித்தும்,  நாட்டின் ஒவ்வொருவரும் தங்களது பள்ளிப்பாடங்களின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், பெரியோர்கள் மற்றும் ஆன்மிக அன்பர்களின்  மூலமாகவும்  கேள்விப்பட்டி ருப்போம்…. இந்த அயோத்தியானது,  இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள பைசாபாத் மாவட்டத்தில்  உள்ளது.

பண்டைய காலத்தில் அயோத்தி நகரம்

ராமர் பிறந்த இடமாக மக்களால் அறியப்படும் அந்த ராம ஜென்மபூமி அயோத்தியின் சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.  பண்டைய கோசல நாட்டின் தலைநகரமும் அயோத்திதான்.

பண்டைய காலங்களில் பாரதத்தின் ஒவ்வொரு பகுதியும் சிறுசிறு  குறுநில மன்னர்களின் ஆட்சியின் கீழ் சிறப்பாக வழி நடத்தப்பட்டு வந்தது. இந்த குறுநில அரசுகளின்மீது, அண்டை நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய மன்னர்களின்  படையெடுப்பு காரணமாக, பல குறுநில மன்னர்களின் ஆட்சி பறிக்கப்பட்டு, இஸ்லாமியர்களின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் பண்டமாற்று முறை  என்கிற அடிப்படையில் நடந்த அரேபிய-இந்திய வணிகம், அதையடுத்து போர்ச்சு கீசியர், பின்னர், பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி என ஒவ்வொரு நாடாக இந்தியாவில் கால்பதித்து இந்தியாவைத் தமக்குள் பங்கு போட்டுக்கொண்டன. இறுதியில், இந்தியாவை இங்கிலாந்து நாடு அடிமையாக்கி, ஆட்சி செய்து வந்தது.

தற்கிடையில், 1528ம் ஆண்டு அந்த பகுதியை ஆண்டு வந்த மன்னர் பாபர், ராமர் பிறந்த இடமான ராமஜென்ம பூமி என்று அழைக்கப்படும் அயோத்தியில், அவரது பெயரில் பாபர் மசூதி என்ற பெரிய கட்டிடத்தை எழுப்பினார்.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி

இந்த விவகாரம் அன்று முதலே சர்ச்சைக்கு உள்ளாகி தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, அந்த பகுதியில் காலங்காலமாக வசித்து வந்த இந்துக்களுக்கும், இஸ்லாமிய அரசுகளால் குடியமர்த்தப்பட்ட முஸ்லீம்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

ராமர் பிறந்த இடமான ராமஜென்ம பூமியில், முதன்முதலாக 1583ம் ஆண்டு இரு பிரிவினரிடையே மதக்கலவரம் ஏற்பட்டதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலவரத்தை அமைதிப்படுத்தும் நோக்கில்,  அப்போது இந்தியாவை ஆண்டு வந்த, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் 1859ம் ஆண்டு, பாபர் மசூதியின் உள் மண்டபத்தை முஸ்லீம்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்த வும், வெளி மண்டபத்தில் இந்துக்கள் வழிபாடு செய்யும் வகையில் வேலி அமைத்து, அப்போதைக்கு பிரச்சினையை அமைதிப்படுத்தினர்.

பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அயோத்தி பிரச்சினை மீண்டும் விசுவரூபம் எடுத்தது.

இந்து அமைப்பினர் சார்பாக 1949ம் ஆண்டு, ராமர்சிலைகள் எடுத்து வரப்பட்டு, மசூதிக்குள் வைத்து வழிப்பட தொடங்கினர். இதனால் மீண்டும் இரு தரப்பினருக்கும்  இடையே மோதல் ஏற்பட்டது.

இதை எதிர்த்து, இஸ்லாமியர்கள் தரப்பில் சிவில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து, அப்போதைய இந்திய அரசு, ராமஜென்ம பூமி விவகாரத்தை, சர்ச்சைக்குரிய இடமாக அறிவித்து, அந்த இடத்தை மூடி சீல் வைத்து, உள்ளே யாரும் செல்லாபதபடி தடை விதிக்கப்பட்டது.

பாபர் மசூதியில் காவலர்கள் பாதுகாப்பு

இது தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், 1984ம் ஆண்டு விசுவ இந்து பரிஷத் இயக்கம், ராமஜென்ம பூமியில், ராமருக்கு கோவில் கட்டப்படும் என அறிவித்து, அதற்கு ஆதரவாக அப்போதைய பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான எல் கே அத்வானி 1984ம் ஆண்டு நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டார். இதன் காரணமாக நாடு முழுவதும் ராமர் கோவில் விவகாரம் வீறுகொண்டு எழுந்தது.

இந்த நிலையில், ராமஜென்பூமி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த மாவட்ட நீதிபதி, சர்ச்சைக்குரிய இடத்தை சீல் வைக்கப்பட்ட  பூட்டை திறக்க வேண்டும் என்றும், இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் 1986ம் ஆண்டு உத்தரவிட்டார்.

இதனால், ராமர்கோவில் விவகாரம் மீண்டும் பூதாகாரமாக வெடித்தது. மாவட்ட நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் பாபர் மசூதி மீட்பு குழு என தொடங்கி, மேலும் பல வழக்குகளை தொடுத்தனர்.

இந்த பரபரப்பான சூழல்களுக்கு இடையே, விசுவ இந்து பரிஷத் அமைப்பு 1989ம் ஆண்டு மசூதிக்கு அடுத்த பகுதியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டியது. இது இஸ்லாமியர்களிடையே மேலும் விரோதத்தை வளர்த்தது.

இதைத்தொடர்ந்து 1990ம் ஆண்டு விசுவ பரிஷத் அமைப்பினர், பாபர் மசூதியின் பல பகுதிகளை சேதப்படுத்தினர். அப்போது மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி செய்த சந்திரசேகர் தலைமையிலான  அரசு, இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்ய முயற்சி செய்தது. ஆனால், இதில் ஒற்றுமை ஏற்படவில்லை.

பாபர் மசூதி இடிக்கப்படும் காட்சி

இந்த நிலையில், 1991ம் ஆண்டு உபி. மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாரதியஜனதா கட்சி வெற்றி பெற்று முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. மாநில முதல்வராக கல்யாண்சிங் இருந்தார்.

இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் ராமர்கோவில் விவகாரம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியது. ராமஜென்ம பூமியில் ராமர்கோவில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் இருந்து கரசேவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், விசுவ இந்து பரிஷத், சிவசேனா, பாஜக தொண்டர்கள் மற்றும் நாடு முழுவதும் இருந்து திரண்ட கரசேவகர்களால், 1992ம் ஆண்டு டிசம்பர் 6ந்தேதி, மசூதி இடித்துத் தள்ளப்பட்டது.

இதன் காரணமாக நாடு முழுவதும் மதக்கலவரம் மூண்டது. பல இடங்களில் ஏற்பட்ட மோதல்களில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

இதன்பிறகு, நாடு முழுவதும் இந்து முஸ்லிம் கலவரங்கள் தொடர்ந்து வந்தன. மும்பை, சூரத், அகமதாபாத், கான்பூர்,  டெல்லி போன்ற இன்னும் பல நகரங்களில் கலவரம் பரவியது.  இதைத்தொடர்ந்து, 1992ம் ஆண்டு 1993ம் ஆண்டுகளில் மும்பையில் குண்டு வெடிப்பு ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மதக்கலவரங்களில் மட்டும் சுமார் ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளைச் சேர்ந்த  முஜாகுதீன் போன்ற பயங்கரவாத இயக்கங்கள், பாபர் மசூதி இடிப்புக்காக இந்த தாக்குதல்களை நடத்தியதாக கூறினர்.

மும்பை பயங்கரவாத தாக்குதல் (குண்டுவெடிப்பு)

இந்த சூழ்நிலையில்தான், 1998ம் ஆண்டு முதன்முதலாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பதவி ஏற்றது. அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமராகவும், எல்.கே.அத்வானி துணைப்பிரதமராகவும் பதவி ஏற்றனர். இதைத்தொடர்ந்து, மீண்டும் ராமர் கோயில் பிரச்சினை சூடுபிடிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில்தான் உ.பி.யில் 2002ம் ஆண்டு மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, ராமர்கோவில் விவகாரம் நீறுபூத்த நெருப்பாக  எரியத் தொடங்கியது.

இதுதொடர்பாக அலகாபாத் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மற்றும் இந்து அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.

இதற்கிடையில், அயோத்தி நிலம் தொடர்பான வழக்கைத் தொடர்ந்து முதல் மனுதாரரான ராமச்சந்திர பரமஹம்ஸ் என்பவர் கடந்த 2003ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, இரங்கல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் வாஜ்பாய், பரமஹம்ஸ்-ன் ஆசை நிறைவேற்றப்படும் என்றும், அயோத்தியில் ராமர்கோவில் கட்டப்படும் என்று உறுதி அளித்தார்.

ராமஜென்ம பூமி விவகாரம், நீதிமன்ற உத்திரவு மூலமாகவோ, அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ தீர்வு காணப்படும் என்றார்.

இவ்வாறு வழக்கு நிலுவையில் இருந்தபோது, ராமஜென்ம பூமியில், பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது  பாதுகாப்புப் படையினர் திரும்ப தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன், 2009ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. அதில், பாஜக தலைவர்கள் மீது குற்றம் சாட்டியது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு அலஹாபாத் நீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் சிப்காத் உல்லா கான், சுதிர் அகர்வால் மற்றும் தரம் வீர் சர்மா அடங்கிய அமர்வு விசாரித்து,  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் அளவிலான நிலத்தை, ராம்லல்லா விராஜ்மான், நிர்மோகி அகரா, சன்னி வக்பு வாரியம், சமமாக பங்கிட்டுகொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆனால், அதை ஏற்க மறுத்த நிலையில், ராம்லல்லா விராஜ்மான், நிர்மோகி அகரா, சன்னி வக்பு வாரியம் உள்பட பல அமைப்புகள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு வழக்குகள் தாக்கல் செய்தன.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதி மன்றம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு  சுமார் 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தியது.

அப்போது இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பரபரப்பு விவாதங்களும், ஆவனங்களும் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை (09-11-2019) அன்று தீர்ப்பு வழங்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தீர்ப்பை உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் மக்கள் பதற்றத்துடனும், பரபரப்புடனும் காணப்படுகின்றனர். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

More articles

Latest article