காத்மாண்டு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்ட உடனேயே, இந்தியா அதன் புதிய வரைபடத்தை வெளியிட்டது. இந்த வரைபடத்தில் தவறு இருப்பதாக நேபாளம் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் விளக்கம் தந்துள்ளது.

நேபாளம் தனது நாட்டின் ஒரு பகுதியான காலாபாணியை இந்தியா தனது வரைபடத்தில் இணைத்துக் கொண்டுள்ளது என குற்றம் சாட்டியது. இதற்கு விளக்கமளித்த இந்தியா எதுவும் மாற்றியமைக்கப்படவில்லை என கூறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்தைத் திரும்பப் பெற்று ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களை அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் நவம்பர் 2 ஆம் தேதியன்று வெளியிடப்பெற்ற அந்த அரசியல் வரைபடத்தில் தான் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த புது வரைபடத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்த காஷ்மீர் பகுதியான முசாபர்பூர் மற்றும் மிர்பூர் பகுதிகள் ஜம்மு காஷ்மீர் பகுதியுடனும் கார்கில், கில்கிட் பல்கிஸ்தான் பகுதிகள் லடாக்குடனும் இணைக்கப்பட்டிருந்தது. அவ்வாறே காலாபாணியும் இந்தியாவில் இணைக்கப்பட்டுள்ளதென நேபாளம் குற்றம் சாட்டியுள்ளது.

நேபாள அமைச்சகம் விடுத்த குற்றச்சாட்டிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் ரவீஷ் குமார் கூறும் போது “ யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டதோடு காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகள் சேர்க்கப்பட்டது தவிர நேபாளம் குறிப்பிடுவது போல் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை” என்றார்.