சென்னை: சென்னையில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதனால், அந்த ஊராட்சிகளுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு அரசு, தாம்பரத்தை புதிய மாநகராட்சியாக கடந்த 2021ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி,  2021ம் ஆண்டு நவம்பர் 3ந்தேதி  தாம்பரம் மாநகராட்சியை நிறுவ  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து அதன்படி, தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின் தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், மற்றும் அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிப் பகுதிகளையும், சிட்லப்பாக்கம், மாதம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை மற்றும் திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளையும் இணைத்து அறிவித்தது.

தாம்பரம் மாநகராட்சி நிறுவுவதற்கான தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்திற்கு 5 நவம்பர் 2021 அன்று தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து,  தாம்பரம் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 2022-ஆம் ஆண்டில் முதன் முதலாக தாம்பரம் மாநகராட்சியின் 70 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 54 வார்டுகளையும், அதிமுக 9 வார்டுகளையும், சுயேச்சைகள் 7 வார்டுகளையும் கைப்பற்றினர். திமுகவின் க. வசந்தகுமாரி மேயராகவும்; கோ. காமராஜ் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தாம்பரம், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது மாநகராட்சி எல்லை வரைபடம் தயாரிக்கப்பட்டு வருவதுடன்,  அதனுடன் இணைக்கப்படும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் வருவாய்த் துறையில் உள்ள கணக்கின்படி கிராமங்களை வரையறை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சியுடன்,  சென்னை பகுதியில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி,  மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கவுல் பஜார், பெரும்பாக்கம், முடிச்சூர், திருசூலம், சித்தாலம்பாக்கம், நன்மங்கலம், முடிச்சூர் போன்ற பகுதிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது.   இந்த பகுதிகள் மாநகராட்சியுடன்  இணைக்கப்பட இருப்பதால், அந்த பகுதிகளுக்கு  அதிக நிதி மற்றும் சிறந்த வசதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

*தாம்பரம் மாநகராட்சி* உள்ளடக்கிய பகுதிகள்
*நகராட்சிகள்*
1)தாம்பரம்
2)பல்லாவரம்
3)செம்பாக்கம்
4)பம்மல்
5)அனகாபுத்தூர்
*டவுன் பஞ்சாயத்து கள்*
6)பெருங்களத்தூர்
7)பீர்க்கன்காரணை
8)சிட்லபாக்கம்
9)மாடம்பாக்கம்
10)திருநீர்மலை
*கிராம ஊராட்சிகள்*
11)முடிச்சூர்
12)திரிசூலம்
13)பொழிச்சலூர்
14)கவுல் பஜார்
15)அகரம்தென்
16)திருவஞ்சேரி
17)ஒட்டியம்பாக்கம்
18)மதுரபாக்கம்
19)மேடவாக்கம்
20)கோவிலம்பாக்கம்
21)பெரும்பாக்கம்
22)சித்தாலப்பாக்கம்
23)முவரசம் பட்டு
24)வேங்கை வாசல்
25)நன்மங்கலம்