லூதியானா: பீகார், உத்திர பிரதேசம், ஒடிசா, மேற்குவங்கம் போன்ற வட இந்திய மாநிலங்களில் இருந்து குடும்ப வறுமை காரணமாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை செய்யும் ஏழை தொழிலாளர்கள் 15 லட்சம் பேர் கறுப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில் அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையினால் சம்பளம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

migrant_workers

லூதியானாவில் இருக்கும் பல்வேறு தொழிற்சாலைகள் ரூபாய் நோட்டு பற்றாக்குறை காரணமாக தங்கள் தொழிலாளர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்க இயலாத நிலையில் இருக்கின்றன. அவை வழக்கமாக 7 அல்லது 8-ஆம் தேதியே தங்கள் ஊழியர்களுக்கு சம்பளப் பட்டுவாடா செய்துவிடும். ஆனால் இந்த முறை 11 தேதியாகியும் ஊதியம் தரப்படவில்லை. இந்த இழுத்தடிப்பு இன்னும் 10 நாட்கள் நீடிக்கும் பட்சத்தில் அந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லும் அபாயம் இருப்பதாக தெரியவருகிறது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் 80% பேர் வேலை செய்யும் நிறுவனங்களின் கூட்டமைப்பான FOPSIA-வின் தலைவர் பாதிஷ் ஜிந்தால் அரசின் இந்த நடவடிக்கையால் ஒட்டு மொத்த கட்டமைப்பும் நொறுங்கிப் போய் விட்டதாகவும், இது போன்ற சூழல்களை கருத்தில் கொள்ளாமல் அரசு முடிவெடுத்து விட்டது. அதுவும் ஒரு நாளைக்கு 10,000 வாரத்துக்கு 20,000 என்ற கட்டுபாடுகளை விதித்திருக்கிறார்கள். நாங்கள் எப்படி எங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் தர இயலும் என்று குமுறுகிறார்.
அங்கு வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பலருக்கு வங்கி கணக்குகள் இல்லை. அப்படி வங்கி கணக்கு வைத்திருக்கும் சிலருக்கு காசோலைகள் வழங்கப்படுவதாக தெரிகிறது. மேலும் சில நிறுவனங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்களது வங்கி கணக்குகள் வழியாக வங்கிக் கணக்கு இல்லாத தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கியிருப்பதாகவும் தெரிகிறது.