சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி  தமிழ்நாட்டில் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு  அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி,  நவம்பர் 9 முதல் 3 நாட்கள் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால்  சிறப்பாக கொண்டாடப்படக்கூடிய மிக முக்கிய பண்டிகை தீபாவளி திருநாள். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்தாண்டு ஐப்பசி 26ம் தேதி, அதாவது நவம்பர் 12 ஞாற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு அரசு வார விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறை நாட்களில் நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கும், வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. இதையடுத்து தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவித்து உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்குபடுவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தொடர்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே ரயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதமே  நிரம்ப உள்ள நிலையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்து உள்ளது.

அதன்படி,  தினசரி இயக்கக் கூடிய  பேருந்துகளுடன் நவம்பர் 9 முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வழக்கமாக 6300 பேருந்துகள் இயங்கி வருகின்றன வழக்கமான பேருந்துகளுடன் 4,675 சிறப்பு பேருந்துகளும் சென்னையிலிருந்து இயக்கம் மொத்தம் 10,975 பேருந்துகள் தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் நவம்பர்  9,10, 11 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் 9 ஆம் தேதி 3,465 பேருந்துகளும், 10 ஆம் தேதி 3,395 பேருந்துகளும், 11 ஆம் தேதி 3,515 பேருந்துகள் என  மொத்தம் 10,975 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கூட்ட நெரிசலின்றி பயணிகள் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் தவிர்த்து 5 தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்படுகிறது. அதன்படி,

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ECR வழியாக புதுச்சேரி, கடலூர் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழகம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி செல்லும் பேருந்துகள், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரிகடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர். ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் காஞ்சிபுரம் செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி செல்லும் செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.