சென்னை: தனக்கு அன்பளிக்காக வழங்கப்படும் புத்தகங்களில் சுமார் 1500க்கும் மேற்பட்ட புத்தகங்களை, தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்கொடையாக வழங்கினார்.

சென்னை தலைமை செயலகத்தில்  இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள சிறை நூலகங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.  நன்கொடையாக பெறப்பட்ட 1,500 புத்தகங்களும் தமிழ்நாட்டில் உள்ள 140க்கும் மேற்பட்ட சிறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில், விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகள் என ஏராளமான  கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடையே நல்லொழுக்கத்தையும், வாசிப்பு திறனையும் மேப்படுத்தும் வகையில் சிறையிலேயே நூலகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  பல கைதிகள் நேரம் கிடைக்கும்போது,  சிறை வளாகத்தில் உள்ள நூலகத்தில் தங்களுக்கு பிடித்த நூல்களைத் தேடிப் பிடித்து படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னை சந்திக்க வருபவர்கள்  அன்பளிப்பாக வழங்கும் புத்தகங்களை சேமித்து வைத்து பல்வேறு நூலகங்களுக்கு அவ்வப்போது வழங்கி வருகிறார். அதன்படி, இன்று சுமார் 1500க்கும் மேற்பட்ட புத்தகங்களை சிறை நூலகங்களுக்கு வழங்கி உள்ளார்.