நாகர்கோவில்: ககன்யான் திட்டம் 2025-ம் ஆண்டில் வெற்றிகரமாக செயற்படுத்த அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற் கொள்ள வேண்டி உள்ளது இஸ்ரோ முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது. . ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில், மூன்று இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள   இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கி.மீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள். பிறகு மீண்டும் பூமியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு இந்திய கடற்பரப்பில் விழச் செய்து மீட்டு வரப்படுவார்கள்.

இந்தத் திட்டம் விண்வெளி ஆய்வில் உள்நாட்டு நிபுணத்துவம், இந்திய தொழில்துறையின் அனுபவம், இந்திய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவுசார் திறன்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான ஒத்துழைப்பில் இருந்து கிடைக்கக்கூடிய நவீன தொழில் நுட்பங்களைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்ட உத்தியின் மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் அடுத்தக்கட்டமாக,  ஆள் இல்லாத விண்கலம் ஏவப்பட உள்ளதாகவும், அதைத்தொடர்ந்த விண்கலத்தில் ரோபோக்கள் அனுப்பி ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும்  2025-ம் ஆண்டில் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மொத்தம் 2400 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதுவரை முழுமையான நிலம் மீட்கப்படவில்லை என்றவர், இன்னும் தேவைப்படும்  400 ஏக்கர் நிலத்தை இன்னும் 2 மாதங்களில் தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி  கொடுக்கும் என்று நம்புவதாகவும்  தெரிவித்தார்.