குஜராத் மாநிலத்தில் 10,098 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு அளித்த தகவலில் 19,964 பேர் இறந்ததாக கூறியுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்குவது குறித்த வழக்கில் அறிக்கை சமர்ப்பித்த குஜராத் அரசு ஏற்கனவே அறிவித்ததை விட அதிகமாக 9,866 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

இழப்பீட்டு கோரி 34,678 பேர் விண்ணப்பித்ததாகவும் அதில் 19,964 பேருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.

நாடு முழுக்க சுமார் 4.85 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பெறப்பட்ட 87,000 விண்ணப்பங்களில் 8,000 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

குஜராத், மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்கள் தவிர பிற மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை.

இழப்பீடு வழங்க நடவடிக்கைகளை மாநில அரசுகள் விரைந்து எடுக்கவேண்டும் என்றும் இந்த திட்டம் குறித்து கிராமங்கள் தோறும் சென்று சேரும் வகையில் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்றும் அறிவுறுத்தியது.