சென்னை: பொது இடங்களில் மரம் நட ஐஏஎஸ்அதிகாரி தலைமையில் 10 பேர் கொண்ட பசுமைக்குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாடு   வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயற்கை சூழலை பேணும் வகையில், மியாவாக்கி காடுகள் என அழைக்கப்படும்  காடுகள், காலியாக உள்ள அரசு இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த வகையான காடுகள், சாதாரண காடுகள் 10 ஆண்டுகளில் பெறும் வளர்ச்சியை 2 ஆண்டுகளில் பெறும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.இந்த காடுகளுக்கு குப்பை கழிவில் இருந்து தயாரிக்கப்டும் இயற்கை உரம் போடப்பட்டு வருகிறது. இதுபோன்ற காடுகள் சென்னையின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு,  தமிழகத்தில் உள்ள பொது இடங்களில் மரம் நடுவதற்கும் அதை முறைப்படுத்தவும் மாநில அளவில் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் 10 பேர் கொண்ட பசுமைக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த குழுவில்,  தொழில்துறை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய் துறை, இந்து அறநிலையத்துறை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை முதன்மைச்செயலாளர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் மரம் வளர்ப்பது மட்டுமின்றி மரம் வெட்டுவதை ஒழுங்குபடுத்தும் பணிகளையும் கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட அளவில் அமைக்கப்படும் பசுமை குழுவிற்கு, மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட வருவாய் அதிகாரிகள், மாவட்ட எஸ்.பி, வனத்துறை அதிகாரி, பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளும் முழு உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள் என்றும்,  பொதுமக்கள் சார்பாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் இரண்டு பேரும் மாவட்ட பசுமை குழுவில் நியமிக்கப்படுவார்கள் என அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.