டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணையை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில்,  மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம்  கொண்டு வரப்பட்டது. 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பாஜக தேர்தல் உடன்பாடு காரணமாக இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது.

வன்னியர் இடஒதுக்கீடு தேர்தல் நாடகம் – கே.என். நேரு

இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து,  பசும்பொன் மக்கள் கழகம்தென்னாடு மக்கள் கட்சி உள்பட பல்வேறு சமூக அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. மனுவில், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது, வகுப்புவாரி இடஒதுக்கீடு மட்டுமே இருக்க வேண்டும் என்றும், சாதிவாரி இடஒதுக்கீடு இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளதை மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.  இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து,  தமிழக அரசால் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட  10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு  தீர்ப்பு வழங்கியது.

வன்னியர் இடஒதுக்கீடு ரத்து எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது! கருணாஸ்…

இந்த நிலையில், வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

சுமார்  100 பக்கங்களை கொண்ட அந்த மேல்முறையீட்டு மனுவில்,  “அரசியலமைப்பு சட்டத்தின்படி உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதுஅந்த வகையில்,ஏற்கனவே,முஸ்லீம் பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடும், அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடும் வழங்கப்பட்டு உள்ளது. கல்வி,வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுகீட்டில் வன்னியருக்கு உள்ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் விதித்துள்ள  தடை காரணமாக ஒட்டுமொத்த நிர்வாகமும் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளது. உள்ஒதுக்கீடு என்பது வன்னியர் சமூகத்தினருக்கு மட்டுமல்ல. மாறாக, 7 பிரிவினருக்கானது என்பது உள்பட பல தகவல்களை தெரிவித்து உள்ளன.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.