கட்டுரையாளர்: காண்டீபன்
0
.தி.மு.கவில் இருந்து பாலவாக்கம் சோமு, தூத்துக்குடி ஜோயல் என்று மாவட்ட நிர்வாகிகள் பலரை இழுத்தது தி.மு.கழகம். தற்போது தே.மு.தி.கவில் இருந்து நிர்வாகிகளை இழுக்க ஆரம்பித்திருக்கிறது.
கூட்டணிக்கு வரும்படி கெஞ்சி, கொஞ்சி கருணாநிதி அழைப்பு விடுத்தும், மறைமுக பேச்சுவார்த்தைகள் நடத்தியும் விஜயகாந்த் படியவில்லை. அவர் வேறு முடிவு எடுத்து ம.ந.கூவுடன் கூட்டணி வைத்துவிட்டார்.
அப்படி கூட்டணி அறிவிக்கப்பட்ட போதே, “இனி தே.மு.தி.கவில் இருந்து நிர்வாகிகளை தி.மு.க. இழுக்கும்” என்று யூகம் கிளம்பியது. அதற்கேற்ற மாதிரி தே.மு.தி.க திருவள்ளூர் நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் யுவராஜ், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள்.. என்று தொடர்கிறது.
தற்போது தே.மு.தி.க. எம்.எல்.ஏவான சந்திரகுமாரையும் தி.மு.க. இழுத்துவிட்டதாகவும், இதற்கான “இணைப்பு” அறிவிப்பு விரைவில் வரும் என்றும் சேதி பரவியிருக்கிறது.
இப்படி மாவட்ட நிர்வாகிகளை இழுப்பதால்,  ஒரு கட்சி பலவீனம் அடையுமா?
அப்படி இல்லை என்பது வரலாறு. குறிப்பாக தி.மு.க.வின் வரலாறு.
அக் கட்சியை விட்டு  எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது, அவருடன் நிர்வாகிகள் பெரும்பாலானவர்கள் செல்லவில்லை.  அவர்கள் எல்லோரும் தி.மு.கவில்தான் இருந்தார்கள்.
ஆனால், அ.தி.மு.க.வதான் பலம் பெற்ற கட்சியாக விளங்கி, தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தது. காரணம், எம்.ஜி.ஆருடன் சென்றவர்கள் தொண்டர்கள். அவர்தான் ஒரு கட்சிக்கு பலம்.
அதே போல தி.மு.கவில் இருந்து வைகோ பிரிந்தபோது, கணிசமான மாவட்ட செயலாளர்கள் அவருடன் சென்றார்கள். ஆனால் தொண்டர்கள் கணிசமாக செல்லவில்லை. ஆகவே தி.மு.கவுக்கு பெரும் இழப்பு ஏற்படவில்லை.
ஆக, மாவட்ட நிர்வாகிகள் சிலர் செல்வதால் அந்தந்த மாவட்டங்களில் கட்சியே காணாமல் போய்விடும் என்று நினைப்பது தவறு.
குறிப்பாக, தே.மு.தி.கவைப் பொறுத்தவரை, விஜயகாந்த்தான் எல்லாமே. அக் கட்சியை பலவீனப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. நினைத்தால் விஜயகாந்தைத்தான் தன் கட்சிக்கு இழுக்கவேண்டும். வேறு எவரை இழுத்தாலும் அக் கட்சிக்கு பாதிப்பு ஏற்படாது.
இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. இப்படி தே.மு.தி.க. நிர்வாகிகளை இழுப்பதால் தி.மு.க.வுக்கு அவப்பெயரே கிடைக்கும். “கூட்டணிக்கு வரலை என்றதும் ஆளுங்களை இழுக்குறாரே கருணாநிதி” என்ற அவச்சொல்லுக்குத்தான் ஆளாக வேண்டியிருக்கும்.
“இந்த இழுப்பு வேலைகளை கருணாநிதியின் விருப்பமின்றியே ஸ்டாலின் மருமகன் சபரீசன்தான் செய்கிறார்” என்று சப்பைக்கட்டு கட்ட முடியாது.
ஆக இந்த இழுப்பு வேலைகள் தி.மு.கவுக்கு லாபமா என்பது முக்கியமான கேள்வி.