supreem
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தமது இறுதிவாதங்களை முன்வைத்தார்.
அவர் முன்வைத்த வாதங்கள் பின்வருமாறு: – ஜெயலலிதா மீது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் சொத்து குவிப்பு வழக்கே போடப்பட்டது. வருமான வரி தீர்ப்பாயமே முறையற்ற சொத்து ஏதும் குவிக்கப்படவில்லை என கூறிவிட்டது. ஆனால் இதை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவே இல்லை. இந்த வழக்கு முழுவதுமே ஜோடிக்கப்பட்ட ஒன்றாகும்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே முறைப்படியான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. நமது எம்ஜிஆர் நாளிதழின் வருமான வரி கணக்குமட்டும்தான் குற்றப்பத்திரிகை தாக்கலின் போது தாக்கல் செய்யப்படவில்லை. சசிகலா, இளவரசி இருவரும் ஜெயலலிதா வீட்டில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு வருமானம் என்று எதுவும் இல்லை. ஆனால் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதற்காகவே மூவருக்கும் இடையே பணப்பரிமாற்றம் நடந்தது என கூறுவது தவறானது. ஜெயலலிதாவின் சொத்துகள் மிகையாக மதிப்பிடப்பட்டுள்ளன.
அவரது சொத்துகளுக்கு முறையான வருமானம் காட்டப்பட்டுள்ளது. மற்றவர்கள் சேர்த்த சொத்துகளுக்கு எல்லாம் ஜெயலலிதா ஏன் விளக்கம் தர வேண்டும்? சொத்து குவிப்பு வழக்குகளில் வருமான வரித்துறை ஆவணங்களையும் ஏற்றுக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’’ என்று நாகேஸ்வரராவ் தனது வாதத்தில் கூறியுள்ளார்.