சென்னை

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களில் பார்கோட் அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்குத் தேவையான மதுபான வகைகளை 3 வித ஆலைகள் உற்பத்தி செய்கின்றன. இதில் இந்தியத் தயாரிப்பில் அயல்நாட்டு மதுபானங்களான பிராந்தி, விஸ்கி, ஓட்கா, ரம், ஜின் போன்றவற்றை மதுபான உற்பத்தி செய்யும் 12 ஆலைகள் உற்பத்தி செய்கிறது. அத்துடன் பீர் வகைகளை 7 ஆலைகளும், ஒயின் வகைகளை 3 ஆலைகளும் உற்பத்தி செய்கின்றன.

இவ்வாறு மது ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மதுபாட்டில்கள் தமிழகத்தில் உள்ள 43 கிடங்குகளுக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு  ங்கிருந்து 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனைக்கு மது பாட்டில்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட இடத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் கைகளில் செல்லும் வரையிலான தகவல்களை வாடிக்கையாளர்கள் அறிய முடியும் வகையில் ஒவ்வொரு மது பாட்டில்களிலும் ஒரு பார்கோட் வசதி கொண்டு லேபிள் அச்சிடப்பட்டு ஒட்டப்படுகிறது.

ஒரு மதுபாட்டில் விற்பனை செய்த பிறகு அந்த பாட்டிலில் உள்ள லேபிளை ஸ்கேன் செய்து பார்த்தால், அந்த பாட்டில் எந்த ஆலையில் எந்த தேதியில், எத்தனை மணிக்கு உற்பத்தி செய்யப்பட்டது?, எப்போது கிடங்குக்குக் கொண்டு வரப்பட்டது? பின்னர் எப்போது டாஸ்மாக் மதுபான கடைகளுக்குக் கொண்டு வரப்பட்டது? எந்த டாஸ்மாக் கடையில், எத்தனை ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது? என்ற தகவல்களை வாடிக்கையாளர்கள் அறிய முடியும்.

இதை எண்ட் டு எண்ட் என்ற முறையில் பிரத்தியேக மென்பொருள் (சாப்ட்வேர்) தயார் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்துக்கு இதற்கான கணினி நுட்பத்தை வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளியை  வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 12 மாத கால அவகாசத்தில் இந்தப்பணிகள் முடிவடையும். அதற்குப் பிறகு அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும் கணினி மயமாக்கப்பட்டு  எந்த முறைகேடுகளும் நடப்பதற்கான வாய்ப்புகளும் இருக்காது என்று டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் கூறினர்.