காங்டாக்

சிக்கிம் மாநில அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை என அரசு அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் சிக்கிம் கிரந்திகாரி மோர்சா மற்றும் சிக்கிம் குடியரசு முன்னணி ஆகிய அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதில் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா மொத்தமுள்ள 32 இடங்களில் 17 இடங்களை வென்று ஆட்சி அமைத்துள்ளது.

ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்சா கட்சியின் தலைவர் பி எஸ் கோலே முதல்வராக பதவி ஏற்றுள்ளார். முந்தைய சிக்கிம் குடியரசு முன்னணி ஆட்சியில் உள்ள பல இனங்களை தற்போதைய அரசு மாற்றி உள்ளது. இன்று மாநிலத்தின் பொறுப்பேற்றதும் முதல்வர் கோலே செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பில் கோலே, “இனி அரசு ஊழியர்களுக்கு வாரத்துக்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை தினங்களாக இருக்கும். இதை நாங்கள் தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக அளித்தோம். அதை இப்போது அமுல் படுத்துகிறோம். இந்த ஒரு நாள் அதிக விடுமுறையை அரசு ஊழியர்கள் தங்கள் உடல்நலம் பேணுவதிலும் மற்றும் பெற்றோர்கள், குடும்பத்தினருடன் செலவிடவும் உதவும்.

முந்தைய அரசு அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பயன்படுத்திய சொகுசுக் கார்களை நாங்கள் பயன்படுத்த போவதில்லை. அதற்கு பதில் சாதாரண வாகனங்களை பயன்படுத்த எண்ணி உள்ளோம். முந்தைய அரசு இது போன்ற வாகனங்களை பயன்படுத்தி மக்கள் பணத்தை வீணடித்தது. இனி அது நிறுத்தப்படும்.” என தெரிவித்துள்ளார்.