33
சனி பகவான் கோவிலில் பெண்கள் நுழைந்ததால் கற்பழிப்புகள் அதிகரிக்கும் என சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டேராடூன்:
மராட்டிய மாநிலம் அஹமத் நகரில் புகழ்பெற்ற சனி சிங்னாபூர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே திறந்தவெளி பகுதியில் அமைந்துள்ள கருவறையில் பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 400 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த தடைக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராடி வந்தனர். இந்த பாலின பாகுபாடு தொடர்பாக பூமாதா படை அமைப்பினர் மராட்டிய ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சனி பகவான் கோவில் கருவறையில் நுழைய பெண்களுக்கு அனுமதி வழங்கி கடந்த 1-ந்தேதி தீர்ப்பளித்தது.
இதனால் மகிழ்ச்சியடைந்த பெண்கள் சனி பகவான் கோவில் கருவறையில் சென்று வழிபாடு நடத்தினர். மேலும் இந்த கோவில் கருவறைக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என கோவில் நிர்வாகமும் சமீபத்தில் அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக துவாரகா-சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ஹரித்வாரில் ஆன்மிக பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் இதுகுறித்து கூறியதாவது:-
மராட்டிய மாநிலத்தில் உள்ள சனி பகவான் கோவில் கருவறைக்குள் நுழைந்தது குறித்து பெண்கள் வெற்றிக்களிப்பில் மிதக்க வேண்டாம். இந்த செயலை செய்ததற்காக தம்பட்டம் அடித்துக்கொள்வதை அவர்கள் நிறுத்த வேண்டும். சனி வழிபாடு பெண்களுக்கு நல்லதல்ல. சனி பகவானை வழிபடுவது அவர்களுக்கு துரதிர்ஷ்டத்தையே கொண்டு வரும். சனி பகவான் கோவில் கருவறைக்குள் நுழைந்ததால் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு போன்ற குற்றங்கள் அதிகரிக்கும்.
சனி சிங்னாபூர் கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைந்திருக்கக்கூடாது. அதற்கு பதிலாக ஆண்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை பெண்கள் நிறுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் இந்த பொருட்களால் தான் கற்பழிப்பு போன்ற குற்றங்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறினார்.
அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சியினரும், பெண்கள் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித்தலைவர்களில் ஒருவரான பிருந்தா கரத் கூறுகையில், ‘இத்தனை ஆண்டுகளாக சனி பகவான் கோவில் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்படியானால் கற்பழிப்பு போன்ற குற்றங்களை பெண்கள் இதுவரையிலும் அனுபவிக்கவில்லையா? இதற்கு ஸ்வரூபானந்த் சரஸ்வதி பதிலளிப்பாரா?’ என்று கேள்வி எழுப்பினார்.