ராஞ்சி:

தன்பாத் துணைமேயர் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஜார்கண்ட் பாஜக எம்எல்ஏ சஞ்சீவ் சிங், மறதி நோய் சிகிச்சைக்காக ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாஜக எம்எல்ஏ சஞ்சீவ் சிங்.

சஞ்சீவ் சிங் மறதி நோய் அல்லது தற்காலிக நினைவிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி தன்பாத்தில் துணைமேயர் நீரஜ் சிங் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து பாஜக எம்எல்ஏ சஞ்சீவ் சிங் சரணடைந்தார். கொலை வழக்கில் சிறையில் இருந்த சஞ்சீவ் சிங்கை, தன்பாத் சிறையிலிருந்து பாதுகாப்போடு அழைத்துச் செல்வதில் பாதுகாப்பு பிரச்சினை இருந்தது.

இந்த வழக்கில் சஞ்சீவின் வழக்கறிஞர் முகமது ஜாவேத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாடலிபுத்ரா மருத்துவமனை மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு, ராஞ்சியில் உள்ள நரம்பியல் மற்றும் மன நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்தனர். இது குறித்த அறிக்கையை பாடலிபுத்ரா மருத்துவமனை மருத்துவர்களிடம் சிறை நிர்வாகம் கேட்டிருந்தது. அவர்கள் தராததால், சஞ்சீவ் சிங்கிற்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, சஞ்சீவியை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு சிறைத்துறைக்கு கடந்த 5-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதுகாப்பு காரணமாக அன்றைய தினம் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமையன்று பாஜக எம்எல்ஏ சஞ்சீவ் சிங், ராஞ்சி நரம்பியல் மற்றும் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.