காசியின் சிறப்பு :
“காச்யதே பிரகாசதே இதி காசி ”   – எது சுயமாகப் பிரகாசிக்கிறதோ அது காசி.

வரணை, அசி என்ற இரண்டு ஆறுகள் கங்கையோடு கலக்கின்றன. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள நகரமே வாராணசி. இதை  வாரணாசி என்றும் வாரணவாசி என்றும் கூறுவது உண்டு.
வரணையும் அசியும் தம்மை நெருங்கியவர்களின் பாவங்களைத் தீர்க்கின்றனவாம்.
“சார்ந்தவர் பாவநீங்கத் தகைதலான்வரணை யென்றும்ஆர்ந்தநீர்படிந் தோர்பாவமறுத்தலால் அசியேயென்றும்” வழங்குவதாக ஸ்ரீ அதிவீராமபாண்டியர் காசிகாண்டத்தில் கூறுகிறார்.
மணிகர்ணிகை என்ற துறையில் அமர்ந்து முழுமுதற்கடவுளான முக்கண்ணனே அங்கேயிறந்த உயிர்களின் வலதுகாதில் பிரணவ மந்திரம் கூறி பிறவாநெறியூட்டுவதாக சமய நூல்களும் எடுத்துரைக்கின்றன.
இந்துகள் அனைவருக்கும் மிகவும் பரீட்சயமான பெயர் #காசி #விஸ்வநாதர். அதி புனிதமாகப் கருதப் படும் ஓர் தலம் இது.
காசி விஸ்வநாதர் கோயில் இந்துக்களின் புனித நகரமாக கருதப்படும் வாரணாசியில் கங்கை நதியின் மேற்கு கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலின் மூலவர் பெயரான விஸ்வநாதர் என்பதற்கு அகிலத்தை ஆள்பவர் என்று பொருளாகும்.
3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாக அறியப்படும் காசியின் (வாரணாசி) பெயராலேயே இக்கோயில் காசி விஸ்வநாதர் கோயில் என்று அழைகப்படுகிறது. மேலும் சிவன் கோயில்களிலே இதுதான் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களுள் காசி தலமே மிகப் பிரசித்தி மிக்கது. இங்கு மூலவர் மரகததினால் ஆனவர் என்னும் சிறப்புடன் விஸ்வநாதர் என்று அழைக்கப் படுகின்றார்.  அம்மன் விசாலாட்சி. 51 சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலம் மணிகர்ணிகா பீடம் என அழைக்கப் படுகின்றது.
பாரதத்தின் புராணக் கதைகளில் எல்லாம் வரும் காசி நகரம் மிகவும் பழமையானது. வாரணா, ஹசி ஆகிய இரு நதிகளுக்கு இடையே அமைந்த நகரமாதலால் வாரணாசி என்றும் அழைக்கப் படுகின்றது.
 கிட்டத்தட்ட 23,000 ஆலயங்களைக் கொண்ட, இந்த பழம் பெரும் வாரணாசி நகரம், ‘கோவில்களின் நகரம்’ என்று அழைக்கப் படுகின்றது. நகரத்தின் மையமாக, இந்தியாவின் அதி உன்னதமான ( புனித கங்கை மாதா ) ஆறு  ஓடுகிறது . இந்தியாவின் கலாச்சார, புராண கதைகளின் மத்திய புள்ளியாக இந்த நகரமே விளங்குகின்றது.
 இதனால், இறந்தவர்களின் உடல்களை இங்கே, முக்கியமாக மணிகர்ணிகா தீர்த்த படிக்கட்டுகளில், தகனம் செய்வதனை காணலாம். தகனம் செய்தபின் சாம்பல் கங்கை நதியில் கரைப்பது வழமை
லிங்கம் பூமி மட்டத்தில் இருந்து ஒரு சிறிய பள்ளத்தில் உள்ளது. பக்தர்கள் மண்டியிட்டு குனிந்தே, விசுவநாதரை தொட்டு வணங்குவர். லிங்கத்தின் தலைப்பகுதியில் தங்க முலாம் இடப்பட்ட தாமிரத் தகடு காணப் படுகின்றது. லிங்கத்தினை சுற்றி வெள்ளி தகடு கொண்டு பெட்டி வடிவில் தட்டு அமைத்து உள்ளார்கள். லிங்கத்தின் மேலே ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விடப் பட்டுள்ளது. இதில் நிரப்பப்படும் கங்கா தீர்த்தம் சொட்டு சொட்டாக லிங்கத்தின் மேலே அபிஷேகம் செய்கிறது.
கோவிலின் பின் பக்கமாகச் சுவரினைப் பார்த்தவாறு ஒரு நந்தி காணப் படுகின்றது. இது ஆதி நந்தி என அழைக்கப் படுகின்றது. இந்த நந்திக்கு அருகாமையில் ஞானவாவி தீர்த்த கிணறும் காணப் படுகின்றது. 
விசாலாட்சி அம்பாள் கோவிலும், அன்னபூரணி அம்மாள் கோவிலும் தனித்தனியாகச் சிறிது தொலைவில் இருக்கின்றன.
விசாலாட்சி அம்பாள்
தென்னாட்டுப் பாணியில் காணப் படும் விசாலாட்சி கோவிலில் நவக்கிரகங்களை வழிபடலாம்.
கல்வி தரும் கிரகமான புதன் இந்த ஆலயத்தில் காசி விசுவநாதரை வழிபட்டு நன்மை அடைந்ததால், மாணவர்கள் இந்த தலத்தினை வணங்கி பயன் பெறலாம். இங்கே மரணம் அடைபவர்கள் சொர்க்கத்தினை அடைவார்கள் என்று பல இந்துக்கள் நம்புகின்றனர்.
எல்லை இல்லாக் கருணையும் ,பேரன்பும் கொண்ட காசி விசுவநாதர் தரிசனம், பேரானந்தத்தினை தருவதால், இவ்வாலயம் ‘ஆனந்த பவனம்’ என்றும் அழைக்கப் படுகின்றது.
ஆதி சங்கராச்சார்யா , சுவாமி விவேகானந்தா, ராமகிருஷ்ண பரமஹம்சா , குருநானக், சுவாமி தயானந்தா சரஸ்வதி போன்ற மகான்கள் இங்கு வந்து கங்கையில் நீராடி, லிங்க தரிசனம் செய்துள்ளார்கள்.
 உலகம் முழுவதும் இருந்தும் பெருமளவில் யாத்திரிகளைக் கவரும் இந்தக் கோவிலின், சிவராத்திரிப் பெருவிழாவானது மிகப் பிரசித்தி மிக்கது.
ஏனைய 11 ஜோதி லிங்க ஆலயங்களை வணங்குவதனால் கிடைக்கும் பலனை இந்த ஒரு ஆலயத்தினை வணங்குவதன் மூலம் பெறமுடியும் என்பது பல இந்துக்களின் நம்பிக்கையாகும்.