1

 

விசூர்: கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற விஜயகாந்த் தனது கட்சியின் பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்துவை சரமாரியாக அடித்தார். தனது வாகன ஓட்டியையும் எட்டி உதைத்தார். இவரது ஆத்திரத்தைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையம், விசூர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அப்போது அங்கு எதிர்பார்த்ததை விட அதிகமாக மக்கள் கூடிவிட்டனர். இதனால் நிவாரண பொருட்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. வேனில் நின்றிருந்த விஜயகாந்த் இதனால் வழக்கம்போல டென்ஷன் ஆனார். ஓட்டுனரை ஆத்திரத்துடன் உதைத்து, “சீக்கிரம் போடா” என்று கத்தினார். இதனால் அவரது அருகில் நின்றிருந்த பண்ருட்டி எம். எல்.ஏ. சிவக்கொழுந்து நடுங்கியபடி நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்த விஜயகாந்த், ஆத்திரம் அடங்காமல் அவரது தலையில் நான்கு முறை சரமாரியாக அடித்தார். அப்போது அவர் ஏதோ திட்டினார். அது பொது மக்களுக்கு சரியாக கேட்கவில்லை.

ஏற்கெனவே மழை வெள்ளத்தால் தங்கள் வாழ்வாதாரம் போய்விட்டதை நினைத்து அதிர்ச்சியில் இருந்த மக்கள், இந்த காட்சியைப் பார்த்து மேலும் அதிர்ந்தனர்.

ஆனால், தன் தொகுதி மக்கள் எதிரிலேயே தனது தலைவர் அடிப்பதை மவுனமாக எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து ஏற்றுக்கொண்டார். அதோடு புன்னகை மாறாமல் மக்களுக்கு கும்பிடு போட்டு அந்த இடத்தைக் கடந்தார்.

பொது இடத்திலேயே டென்ஷன் ஆகி தனது கட்சியினரை அடிப்பதை விஜயகாந்த் வழக்கமாகவே வைத்திருக்கிறார். பத்திரிகையாளர்களிடமும் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் இதுவரை அடித்ததில்லை.

இவரது ஓவர் டென்ஷனை குறைக்க வேண்டும் என்பதற்காக, வற்புறுத்தி ஈஷா யோகா மையத்துக்கு அனுப்பினார் அவரது மனைவி பிரேமலதா. கோவை அருகில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் ஒருவார காலம் யோகா பயிற்சி முடித்து நேற்றுதான் சென்னைக்கு திரும்பினார் விஜயகாந்த். “இப்போது மனசு புத்துணர்ச்சியாக இருக்குது” என்றும் சொன்னார்.

ஆனால் மறுநாளே தனது வழக்கமான ஆத்திரத்தை வெளிப்படுத்திவிட்டார்.

“அண்ணனுக்கு ஈஷா யோகோ ஒர்க் அவுட் ஆகலை” என்று விரக்தியுடன் சொல்கிறார்கள் தே.மு.தி.க கட்சியினர்.